நடிப்பதை நிறுத்துவதாக சொன்னபோது தன்னுடைய அம்மா என்ன சொன்னார் என்பதை நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் ஜூன் 29 ஆம் தேதி ரிலீசாகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வடிவேலு மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள உதயநிதிக்கு திரைத்துறையில் இதுவே கடைசிப்படமாகும்.
அதனால் மாமன்னன் படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேசமயம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூரி, கவின், இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர். என ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டனர்.
இப்படியான நிலையில் படத்தின் ட்ரெய்லர் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸானது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக படக்குழுவினர் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர். அதில் ஒரு நேர்காணலில் உதயநிதி ஸ்டாலினிடம், ‘மாமன்னன் படம் உங்களுடைய கடைசிப்படம். நடிப்பதை நிறுத்துவதாக சொன்னது அம்மா துர்கா ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “மாமன்னன் தான் என் கடைசிப்படம் என அம்மாவிடம் சொன்னபோது அவர்கள் ரொம்ப சந்தோசப்பட்டார்கள். நடுவில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதைக் கண்டதும் ‘என்னது இன்னொரு படமா?’ என கேட்டார். அப்புறம் அந்த படத்தோட ஒன்லைன் சொன்னதும் சரி என சொல்லிவிட்டு,சீக்கிரம் முடிக்குமாறு கூறினார். அப்பாகிட்டேயும் கதையை சொன்னேன். சரி என சொன்னார்.
அதுக்குள்ள நான் அமைச்சராக முடிவு எடுக்கப்பட்டது. எனக்கு துறை ஒதுக்கப்பட்டபோது கமலிடம் போய் சொன்னேன். அவர் கலைப்பணியை விட அரசியல் பணி தான் முக்கியம் என தெரிவித்தார். மற்றபடி அம்மாவுக்கு நான் நடிப்பதை நிறுத்துவதில் ரொம்ப சந்தோசம். நான், அம்மா, அப்பா, மனைவி எல்லோரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம்” என உதயநிதி தெரிவித்துள்ளார்.