தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே உதயநிதி ஸ்டாலின் பெயர் தமிழக அரசியலில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சட்டபேரவை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றார்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்கிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்கவும் தொடங்கினார். சந்தானத்துடன் இணைந்து காமெடி படங்கள் செய்துகொண்டிருந்தவருக்கு மனிதன் திரைப்படம் பெரிய மாற்றத்தை தந்தது. அதன் பிறகு, கண்ணே கலைமானே, நிமிர், போன்ற திரைப்படங்களில் நடித்து தன் ட்ராக்கை மாற்றினார். தற்போது அரசியலில் பிஸியாகிவிட்டதால், பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாது என்பதால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளார். அவர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி நாளை வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். அதுபோக வெளியாகும் பெரிய திரைப்படங்கள், சிறிய திரைப்படங்கள் என நிறைய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்.
நடிகர் சூர்யாவுக்கும், விஜய்க்கும் கூட படம் தயாரித்துள்ளார். விஜய் படமான குருவியில் இருந்துதான் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. இவர்கள் இருவர் குறித்தும் ஒரு பழைய பேட்டியில் பேசுகையில், "சூர்யா சார் ரொம்ப நாள் நண்பர், அவருகிட்ட நான் கேட்டுட்டே இருப்பேன், எப்படி சார் உடம்ப இவ்வளவு ஃபிட்டா வச்சுறுக்கீங்கன்னு. ஏன்னா காலைல இருந்து நைட் வரைக்கும் ஷூட்டிங்ல இருப்பாரு ஒர்க் அவுட் பண்றதுக்கு நேரமே கிடையாதே, எப்படி இது முடியுதுன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். அவரு ஆதவன் படத்துல நடிக்கும்போது என்கிட்ட சொல்லிட்டாரு, 'ரூமெல்லாம் ரொம்ப சாதாரணமா இருந்தா போதும், ஜிம் மட்டும் வேணும்'ன்னு சொல்லிடுவர். கிராமங்கள்ல எல்லாம் படம் பண்ணும்போது ஜிம் கிடைக்கிறது கஷ்டம்ல, அது மட்டும் தான் அவருடைய வேண்டுகோளா இருக்கும். விஜய் சார்க்கு தான் நான் முதல்ல படம் பண்ணி கம்பெனிய ஆரம்பிக்கணும்ன்னு இருந்தேன். அப்போ விஷாலோட டேட் என்கிட்ட இருந்துச்சு. விஜய் சார் கிட்ட கேட்டப்போ விஷால் படத்த பண்ணிட்டு வா போ ன்னு சொன்னாரு. இல்ல சார் உங்க படத்துல இருந்து தான் ஆரம்பிக்கணும்ன்னு ரொம்ப வைராக்கியதோட இருந்தேன், எனக்கு கில்லி எல்லாம் ரொம்ப ஃபேவரைட். அப்போ நடந்தது தான் குருவி", என்றார்.
கமல் கிட்ட ரொம்ப நாளா எனக்கு ஒரு படம் பண்ணுங்கன்னு கேட்டுட்டு இருந்தேன். அப்போ தசாவதாரம் முடிஞ்ச நேரம், தலைவன் இருக்கின்றான் கதைய சொன்னாரு. நான் ரொம்ப அரசியலா இருக்கு சார், இது வேண்டாம், கே எஸ் ரவிக்குமார் படம் மாதிரி காமெடி படமா, ஜாலியா ஒரு படம் பண்ணா சேஃபா இருக்கும்ன்னு சொன்னேன். அப்புறம் அதுக்கான வாய்ப்பே அமையல", என்று அந்த நேரத்தில் ஆதங்கப்பட்டு பேசி இருந்தார் உதயநிதி. ஆனால் தற்போது அந்த வாய்ப்பு அவருக்கு அமைந்து விட்டது. கமல்ஹாசன் நடித்து, தயாரித்துள்ள படம் ‛விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை உதயநிதிதான் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார். ஜூன் 3ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாய் நடந்தது. இதில் கமல், விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் கனகராஜ், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக சிலம்பரசன், அக்ஷரா ஹாசன், உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார் என பலர் கலந்து கொண்டனர்.