நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி ரசிகர்களை விசில் அடிக்க வைத்த திரைப்படம் "மாஸ்டர்". லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோ, விஜய் சேதுபதி வில்லன் அவதாரம் எடுக்க திரைப்படம் ஹிட் ஆனது. அந்த திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பே ஒரு புகைப்படமும் ஹிட் ஆனது. அது தான் ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் எடுத்துக்கிட்டா செல்ஃபி. நடிகர் விஜய் ரசிகர்கள் கூட எடுத்துக்கிட்ட ஒரு சாதாரண செல்ஃபியா அதை கடந்து போயிட முடியாது.
மாஸ்டர் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, நெய்வேலி இப்படினு பரபரப்பாக போய் கொண்டிருக்க, திடீர்னு விஜய் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போ நடிகர் விஜய் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார், அப்போது விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து நடிகர் விஜய் சென்னை அழைத்து வரப்பட்ட சம்பவம் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த சோதனையில் பணம் அல்லது ஆவணம் எதுவும் வருமானவரித்துறைக்கு கிடைக்கவில்லை. அந்த சோதனை எல்லாம் முடிந்த பின்பு நெய்வேலி சென்ற விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால் இந்த வருமான வரித்துறை சம்பவத்திற்கு பின்பு விஜய் ரசிகர்கள் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டை வட்டமடிக்க தொடங்கினர். குறிப்பாக விஜய் ஷூட்டிங் நடக்கும் பகுதியில் மாலை வேளையில் நிற்க கூட இடமில்லாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போ படப்பிடிப்புத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது ஏறிய விஜய் ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இந்த செல்ஃபி விஜய்யின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ரசிகர்களாலும், திரை பிரபலங்களாலும் இந்த செல்வி ரீட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்டானது. ஒரு கட்டத்தில் இந்தியாவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட செல்ஃபி என்ற சாதனையை படைத்தது. 1 லட்சத்து 64,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டு, ஷாரூக்கானின் ட்விட்டர் பதிவின் முந்தைய சாதனையை பீட் செய்தது விஜய்யின் நெய்வேலி செல்ஃபி.
இந்த சம்பவத்திற்கு பிறகு ரிவீல் ஆன ஒரே விஷயம், நடிகர் விஜய் பிகில் மற்றும் மாஸ்டர் படங்களில் வாங்கிய சம்பளம் தான். பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் முறையாக சம்பளம் வாங்கி இருப்பதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்தது.
அதற்கு பிறகு 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யிடம் தொகுப்பாளர்கள் ஒரு கேள்வியை முன்வைத்தார்கள், அது "இப்போது இருக்கும் தளபதி 20 வருடங்களுக்கு முன்பு இருந்த இளைய தளபதியிடம் சொல்ல விரும்புவது என்ன?” என்று.
கொஞ்சம் நேரம் நல்லா யோசிச்ச விஜய் "இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையைப் பற்றிக் கேட்பேன். அப்போது வருமான வரித்துறை சோதனை எல்லாம் இல்லாமல் ரொம்ப நிம்மதியாக இருந்தேன். இப்போது வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் நிம்மதியாகத் தான் இருக்கிறேன்” என்று கிண்டலாக அளித்த பதில் விஜய் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாதது.