அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 


சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பியும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடியவர் அம்பேத்கர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் பெருமைகளையும், அவர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழி தொடர்பாகவும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 






அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லாருக்கும் கிடைக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல்வேறு விதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், அம்பேத்கர் பிறந்தாளை சமத்துவ நாள் என அறிவித்துள்ளோம். இந்நாளில் தீண்டாமை உறுதி மொழி ஏற்று, அம்பேத்கரை போற்றுவோம். அவர் காட்டிய வழியில் பயணித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார். 


மேலும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், “புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் சனநாயக மீட்பு போராட்டமான இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவை மீட்டெடுத்து அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியேற்போம். இந்தியா கூட்டணியின் மாபெரும் வெற்றியை இந்திய அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு சமர்ப்பிப்போம். இந்தியா விரைவில் மீளும்! இந்தியா கூட்டணி ஆளும்!” என தெரிவித்துள்ளார்.