இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். 


நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்ட தூதர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியில் வரும் துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. 


இந்த நாளில் நாடு முழுவதும் அதிகாலையில் மசூதிகள், பொது மைதானங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நாளில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 






அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 


கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “குடும்பம் நிறுவனம் அரசு என்ற எந்த அமைப்பும் யாரோ ஒருவரின் தியாகத்தை முன்வைத்து கட்டமைக்கபடுகிறது அந்த தியாகத்தைக் கொண்டாட்டக் குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது அண்டை வீட்டாருக்கும் ஏழைகளுக்கும் ஈகைப் பண்பாட்டை போதிக்கிறது குறிக்கோள் மிக்க இந்தக் கொண்டாட்டத்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் தருவோர் இருவரும் வாழ்க!” என தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ ஈத் முபாரக்! இந்த சிறப்பு நாள் அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வரட்டும்” என கூறியுள்ளார்.