ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு முடிந்தவுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதுதொடர்பாக எதிர்ப்பு வீடியோ வெளியிடுவார் என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் பிரச்னை
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் சினிமா கேரியரின் கடைசிப் படமாக “ஜனநாயகன்” உருவாகியுள்ளது. இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் தராமல் மத்திய தணிக்கை வாரியம் கடும் கெடுபிடி காட்டியது. பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில் அதற்கு கடும் போட்டியாக தணிக்கை வாரியம் செயல்படுவது கடும் சர்ச்சையை கிளப்பியது. படமும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
வாயை திறக்காத விஜய்
விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் விஜய்யை வைத்து அரசியல் ஆட்டம் ஆடுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம் இந்த விஷயத்தில் விஜய் தவிர பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து சொன்னால் அது வேறு மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தி பட ரிலீஸில் சிக்கலை ஏற்படுத்தலாம் என அவர் நினைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் யாருக்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என விஜய் மௌனமாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
பிரதமருக்கு எதிராக வீடியோ?
இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாரிடம், “கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக, ‘சிஎம் சார்’ அப்படின்னு வீடியோ போட்ட விஜய், ஏன் ஜனநாயகன் பிரச்னை நடக்கும்போது சென்சார் போர்டு விஷயத்துல ‘பிஎம் சார்’ன்னு வீடியோ போடவில்லை? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “என்றைக்கும் எதிரி இவர் தான் என்று முன்னாடி வந்து நின்றால் நம்மால் பேச முடியும். பின்னாடி ஏஜென்சிய வைத்து யார் வேணாலும் ஆபரேட் பண்ணலாம். ஜனநாயகன் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அது முடியட்டும். ஏனென்றால் யாரையும் எதிர்ப்பதற்கு யாருக்கும் எந்த பயமும் இல்லை. காரணம், எல்லாத்தையும் துணிஞ்சுதான் கொள்கை எதிரி யாரு அரசியல் எதிரி யாருன்னு தெளிவாக முடிவு பண்ணிதான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். இப்படி ஒரு தலைவர் யாருமே எந்த கட்சியிலும் செஞ்சிருக்க மாட்டாங்க.திரைமறைவில இருந்து ஏஜென்சி வச்சு ஆபரேட் பண்றவங்களை நாம எந்த நேரத்தில எப்ப பேசணுமோ அப்ப பேசிக்கலாம்” என கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.