தலைவா படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிலையில் ஒரு ட்விட்டர் பதிவு ஒன்று விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்,அமலா பால், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘தலைவா’. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ரிலீசானது. ஆனால் தலைவா படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக டைட்டிலின் கீழே “Time to lead" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. விஜய்க்கு அரசியல் ஆர்வம் உள்ளதை வெளிப்படுத்து விதமாக இது அமைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக சொல்லப்பட்டது.
படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டல்கள் வந்தது. இதனால் இந்த பிரச்சனையை கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவிடம் கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டது. ஆனால் அவரோ தன்னை சந்திக்க முயன்ற விஜய் உள்ளிட்ட படக்குழுவினரை சந்திக்கவே இல்லை. இதனால் தமிழகத்தில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தான் வெளியானது. அதற்குள் பிற மாநிலங்களில் படம் வெளியாகி படம் பற்றி விமர்சனம் பரவ தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு இப்படம் நெருக்கமான ஒன்றாகவே இன்றளவும் உள்ளது. இன்று தலைவா படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விஜய்க்கு மொழிகளை கடந்து பல மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்ட்ரியா சமிதி கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஒய் சதீஷ் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில் தலைவா தினத்தை கொண்டாடியுள்ளார்.இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதில் மாஸ்டர் பட ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய வீடியோவை பகிர்ந்து, “Problems Will, Come & Go,Konjam Chill Pannu Mapi” என அப்படத்தில் வரும் பாடல் வரிகளை தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் வாரிசு படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற விஜய் அங்கு மரியாதை நிமித்தமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்தார். இதன் புகைப்படங்கள் வைரலான நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இந்த ட்விட்டர் பதிவு வெளியாகி இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்