தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னிகள் என்றால் அது எந்த சந்தேகமும் இன்றி திரிஷாவும் நயன்தாராவும் தான். இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருக்கவே முடியாது. இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அவர்களது ரசிகர்களின் பல நாள் கனவாகவே இருந்தது. அந்த கனவு தற்போது நனவாக போகிறது என்ற சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகி அவர்களின் ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. 


 



என்றும் இளமை திரிஷா :


ஒல்லி பெல்லியாக திரிஷா ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் துவங்கி லியோ வரை அவரின் அழகு மேலும் மேலும் அதிகரித்து மெருகேறி கொண்டே தான் வருகிறது. திரைத்துறையில் 20 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் தனது ஹீரோயின் அந்தஸ்தை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் கலக்கி வருகிறார் திரிஷா. அதிலும் பொன்னியின் செல்வன் குந்தவையாக அந்த கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்து இருந்தார் திரிஷா. லியோ படத்தில் விஜய்யுடன் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த திரிஷா, அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு தற்போது உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளார். 


 



லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா :


தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் நடிகை நயன்தாரா சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகையே அசர வைத்துவிட்டார். தொடக்கமே அதிரிபுதிரியாக அமைந்ததால் அடுத்தடுத்து பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 


ஜாம்பவான்களின் கூட்டணி :


இந்த இரு ஸ்டார் நடிகைகளும் உலகநாயகனும் ஜோடி சேர உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி 'நாயகன்' திரைப்படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் KH234 படத்தின் மூலம் இணைகிறார்கள். அவர்களின் கூட்டணியே மிக பெரிய ட்ரீட்டாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது அப்படத்தில் நயன்தாராவும் திரிஷாவும் இணைய உள்ளார்கள் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உற்சாகத்தை இரட்டிப்பாகி உள்ளது. 


 



நடிகை திரிஷா - நடிகர் கமல்ஹாசன் இருவரும் இணைந்து 'தூங்காவனம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் கமல்ஹாசனுடன் நயன்தாரா கூட்டணி சேர்வது இதுவே முதல் முறை என்பதால் எதிர்பார்ப்பு பல  மடங்காக எகிறியுள்ளது. 


படப்பிடிப்பு துவங்கியது :


ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் KH234 படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தான் சென்னையில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரிஷா - நயன்தாரா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விரைவில் முடிவடைந்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாக வேண்டும் என தமிழ் திரை ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து கொள்ளும் அளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.