நயன்தாரா போன்று வர முடியவில்லை என்றாலும் தனக்கான கதைகளை தேர்வு செய்து த்ரிஷா நடித்து வருகிறார். அந்தப் படம் ஹிட் கொடுக்குமா கொடுக்காதா என்பதை பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. படத்தில் மாஸ் ஹீரோ இருந்தால் போதும். அந்தப் படத்தில் நடிக்க கமிட் ஆகி விடுகிறார். அப்படித்தான் 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் அவர் நடித்து வெளியான படம் தான் விடாமுயற்சி. இந்தப் படத்தில் மாஸ் ஹீரோவான அஜித் நடித்திருந்தார். அவருடன் இணைந்து அர்ஜூன், ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் வசூல் ரீதியாக பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரசிகர்களை ஏமாற்றிய இந்தப் படத்திற்கு பிறகு கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் குட் பேட் அக்லீ. இந்தப் படத்தில் அஜித்திற்கு மனைவியாக ஒரு மகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் த்ரிஷா வந்து சென்றிருந்தாலும் அஜித் உடனான காட்சிகளில் ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.
இப்போது இந்தப் படத்திற்கு பிறகு வரும் ஜூன் 5ஆம் தேதி சிம்பு மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திலும் த்ரிஷா நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் கேங்ஸ்டர் கதையை மையப்படுத்திய படமாக வெளியாக இருக்கிறது.
ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்ற முதல் சிங்கிள் நாளை வெளியாக இருக்கிறது. அதுவும் ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக் தான் நாளை வெளியாகிறது. இந்தப் பாடலுக்கு கமல் ஹாசன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு த்ரிஷா இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா45 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் பட்பபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி ஒரே ஆண்டில் த்ரிஷா நடிப்பில் உருவான மாஸ் ஹீரோக்களின் படங்களின் வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையான நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் டெஸ்ட் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது.
இப்போது அவரை ஓவர்டெக் செய்யும் விதமாக ஒரே வருடத்தில் த்ரிஷா நடிப்பில் ஏற்கனவே விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ படம் வெளியான நிலையில் அடுத்து தக் லைஃப், சூர்யா 45 மற்றும் விஸ்வம்பரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.