2018-ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘2018’. டோவினோ தாமஸ் இந்தப் படத்தில் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு படக்குழுவை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.


இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி  என்று பலர் இந்தப் படத்தை பாராட்டத் துவங்கியுள்ளார்கள். ஒரு கேரளத் திரைப்படம் சர்வதேச ரசிகர்கள் மத்தியில் இத்தனை பாராட்டுக்களைப் பெறுவது கேரள மாநிலத்திற்கு எந்த வகையில் ஆதரவளிக்கக்கூடியது என்பதை கருத்தில் கொள்வது மிக முக்கியமானது.


 தி கேரளா ஸ்டோரி


கடந்த சில வாரங்களாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு உருவாக்கியுள்ளது.கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வெளிவந்ததில் இருந்தே இந்த சர்ச்சை தொடர்கிறது.இந்த ட்ரெய்லரில் கேரள மா நிலத்தில் மொத்தம் 33,000 பெண்கள் காணாமல் போனதாகவும் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் கூறப்பட்டிருந்தது. இந்தத் தகவல் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.


முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு


கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்தப் படம் வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.அவர் தெரிவித்த மற்றுமொரு முக்கியமான கருத்து என்னவென்றால் லவ் ஜிஹாத் பிரச்சனை மற்ற மாநிலங்களில் சுமூகமாக முடிந்துவிட்டப் பின்னும் அந்த பிரச்சனையை கேரளாவுடன் முதன்மையாக தொடர்பு படுத்தத் திட்டமிட்ட ஒரு செயல்இது. ’உலகத்தின் முன் கேரள மாநிலத்தை அவமானப்படுத்தும் முயற்சி’ என கூறியிருந்தார் பினராய் விஜயன்.


 எது உண்மையான கேரளா ஸ்டோரி?


இப்போது 2018 திரைப்படத்திற்கு வருவோம். 2018 ஆண்டில் வந்த வெள்ளம் கேரள மாநிலத்தை  திணறடித்தது. கடந்த 90 ஆண்டுகளில் இந்த மாதிரியான ஒரு வெள்ளத்தை கேரள மாநிலம் எதிர்கொண்டது இல்லை. அந்த வெள்ளத்தில் கிட்டதட்ட 450 பேர் உயிரிழந்தார்கள் எனவும் 15 நபர்கள் காணாமல் போனார்கள் என்றும் தகவல்கள் உள்ளன. கேரள மாநிலம்  பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அந்த மாதிரியான ஒரு நிலையில் ஒட்டுமொத்த கேரள மக்களும் சாதி , மத பேதமில்லாமல் ஒருவருக்கு ஒருவர் துணை நின்றார்கள். உலகம் முழுவதும் இருந்தும் மக்கள் கேரளாவிற்கு  உதவிக்கரம் நீட்டினார்கள். டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018 திரைப்படம் இந்த  வெள்ளத்தில் இருந்து கேரள மாநிலம் மீண்டு வந்த கதையை பேசுகிறது.


தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பல திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. பல இடங்களில் கடும் எதிர்ப்புகள் காரணமாக தடை செய்யப் பட்டுள்ளது.கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஒரே சமயத்தில்  பாராட்டுகளும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான ஒரு சூழலில் ”உண்மையான” கேரளா ஸ்டோரி ஒன்றை மக்களிடம் கொண்டுசேர்த்துள்ளது 2018 திரைப்படம் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது