அரும்பு மீசை இளைஞனாக ஒரு மிகப்பெரிய தயரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகன் என பின்னணியில் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் பிரசாந்த். அவர் அறிமுகமான முதல் படம் தான் 1990ம் ஆண்டு இயக்குநர் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


புதுமுக ஹீரோ ஹீரோயினாக பிரசாந்த் மற்றும் காவேரி அறிமுகமான இப்படத்தில் சுலக்சனா, சங்கீதா, கே. பிரபாகரன், ஜனகராஜ், சார்லி, கே.ஆர். விஜயா, சின்னி ஜெயந்த், குமரிமுத்து, கொச்சின் ஹனிபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 


 



அட்டகாசமான இசை :


இப்படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார். இது அவரின் இசையில் வெளியான மூன்றாவது திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்ற 9 பாடல்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. நீலக்குயிலே, சின்ன பொண்ணு தான், தண்ணி குடம் எடுத்து தங்கம், ஆத்தா உன் கோவிலிலே என இப்படத்தின் பாடல்கள் இன்று வரை பிரபலமான பாடல்களாக இருந்து வருகின்றன. சிறந்த இசைமைப்பாளருக்கான விருதையும் இப்படத்திற்காக தேனிசைத் தென்றல் தேவா பெற்றார். 


வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் வணீக ரீதியாகவும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. தமிழில் அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் "ஐ லவ் யூ" என்ற பெயரில் வெளியானது. இந்தி வர்ஷனில் பிரசாந்த் ஜோடியாக சபா நடித்திருந்தார். 


கதை சுருக்கம் : 


ஏழை குடும்பத்தை சேர்ந்த குறும்புத்தனமான புத்திசாலி இளைஞனான பிரசாந்த் மீது அந்த ஊர் தலைவரின் மகள் காவேரி காதல் கொள்ள, அதற்கு முட்டுக்கட்டையாய் நிற்கிறார் ஹீரோயின் அப்பா. ஒரு கட்டத்தில் ஹீரோவை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய காவேரியின் அம்மா மகளின் காதலுக்கு உதவி செய்கிறார். இறுதியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். 


சிறந்த டான்சர் :


முதல் படமே நடிகர் பிரசாந்துக்கு வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்டார். பிரபுதேவாவுக்கு  முன்னர் தமிழ் சினிமாவில் ஒரு மிக சிறந்த டான்சராக இருந்தவர். அஜித், விஜய்க்கு எல்லாம் டஃப் கொடுத்த ஒரு நடிகர் என்றால் அது பிரசாந்த்தான். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசாந்துக்கு அடித்தளம் போட்ட படம் 'வைகாசி பொறந்தாச்சு'. 


இப்படம் மூலம் நடிகர் பிரசாந்த் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.