காதலர் தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த காதலை வெளிப்படுத்தும் ப்ரோபோசல் காட்சிகள் பற்றி காணலாம்.
மௌன ராகம் (1986)
மணி ரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி, கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி எவர்க்ரீன் மூவியாக கொண்டாடப்படும் மௌனராகம் படத்தின் காதல் காட்சிகள் பிரபலமானவை. பிளாஷ்பேக்கில் சில காட்சிகளே வரும் கார்த்திக், கல்லூரியில் வைத்து அனைவருக்கும் காதலை தெரிவிக்கும் விதமாக மைக்கில் பேசும் காட்சி மிகப்பிரபலமானது.
காதலுக்கு மரியாதை (1997)
பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘காதலுக்கு மரியாதை’. இந்த படத்தில் தன் மீதான காதலை ஷாலினி மறக்க சொல்லும் இடத்தில் விஜய் பேசும், ‘மறந்துடுறேன் எல்லாத்தையும் மறந்துடுறேன் ஆனா போன ஜென்மத்துல எப்பவோ பார்த்து ஆசை தீராத உன் முகம் என் மனசுக்குள்ளேயே இருக்கு. அத என்னால மறக்கவே முடியாது’ என பேசும் வசனம் சிறப்பான காதல் காட்சிகளில் ஒன்று .
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (2000)
ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், தபு, மம்முட்டி,ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் என பலரும் நடித்த படம் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்”. இந்த படத்தில் அஜித் - தபு இடையேயான காதல் காட்சியும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் ஆக அமைந்தது.
அலைபாயுதே (2000)
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளியாகி தலைமுறைகள் தாண்டியும் இளம் வயதினரிடையே பிரபலமான படம் என்றால் அது ‘அலைபாயுதே’ தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசை மிகப்பெரிய பலமாக அமைந்த நிலையில் இப்படத்தில் மின்சார ரயில் ஷாலினி நின்று கொண்டிருக்க வெளியே நிற்கும் மாதவன், ‘சக்தி நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசைபடல, நீ அழகா இருக்கன்னு நெனைக்கல ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு’ என சொல்லும் அந்த வசனம் அழகான ஒன்று.
வேட்டையாடு விளையாடு (2006)
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், கமாலினி முகர்ஜி, ஜோதிகா என பலரும் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமல் - கமாலினி இடையே இருக்கும் காதல் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, கமல் காதலை சொன்னதும், ‘நாம சந்திச்சு 2 மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ள என்ன லவ்’ என கமாலினி சொல்லுவார். அதற்கு ‘2 நிமிஷத்துல சொல்லியிருப்பேன். நீ தப்பா நினைச்சிட கூடாதுன்னு சொல்லல’ என கமல் சொல்லும் காட்சி இன்றும் ட்ரெண்ட் தான்.
வாரணம் ஆயிரம் (2009)
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா இயக்கத்தில் வெளியான படம் “வாரணம் ஆயிரம்”. இதில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். இரண்டு பேருக்கும் தனித்தனியாக காதல் காட்சிகள் இருந்த நிலையில் மகனை விட அப்பா சூர்யா அதிகம் கவர்ந்தார். அதிலும் சிம்ரனிடம், “ஹாய் மாலினி ஐ யம் கிருஷ்ணன். நான் இதை சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு அழகு. இங்க எவனும் இவ்வளவு அழகை பார்த்துருக்க மாட்டாங்க’ என சொல்லி காதலை வெளிப்படுத்தும் இடம் அழகின் உச்சம்.
விண்ணைத் தாண்டி வருவாயா (2010)
கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா நடித்த படம் ‘விண்ணை தாண்டி வருவாயா’ . இப்படத்தின் காதல் காட்சிகளுக்கு என்றுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ‘உலகத்தில் இத்தனை பொண்ணுங்க இருந்து நான் ஏன் ஜெஸ்ஸியை மட்டும் லவ் பண்ணேன்?’ என சிம்பு பேசும் அந்த காட்சிக்கு ஹார்ட்டின்களை பறக்க விட்டவர்கள் ஏராளம்.
நான் மகான் அல்ல (2011)
சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த படம் ‘நான் மகான் அல்ல’. இப்படத்தில் யாரென்று தெரியாத இடத்தில் கார்த்தி காஜலை பற்றி தெரிந்த சில நொடிகளில் காதலை சொல்லும் காமெடியாக இருந்தாலும் சூப்பராக இருக்கும்.
ராஜா ராணி (2013)
அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடித்த ராஜா ராணி படத்தில் ஜெய் - நயன்தாரா இடையே காதல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். பயந்த சுபாவம் கொண்ட ஜெய் நயனிடம் தன் காதலை சொல்லும் பொருட்டு, ‘எனக்கு எங்க அப்பா தாங்க பயம், மத்தபடி ஐ லவ் யூங்க’ என க்யூட்டாக சொல்லுவார்.
ரெமோ (2016)
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, சதீஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘ரெமோ’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி காதலிக்கும் சிவகார்த்திகேயன் அவர் கிடைக்க வேண்டும் என பெண் வேடம் எல்லாம் போட்டு படம் முழுக்க வருவார். இப்படியான நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற காதலை வெளிப்படுத்தும் காட்சி இன்றைய தலைமுறையினரிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமாக மாறியது.