தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நட்சத்திரமாக, 50 ஆண்டுகாலமாக தமிழ் திரை ரசிகர்களை தன் கைப்பிடிக்குள் அடக்கி வைத்திருக்கும் வித்தகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதுடன் ரஜினிகாந்துக்கு சிறந்த ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இன்றைய நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் நடிப்பில் தற்போது வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'வேட்டையன்'. 


 



 


'ஜெய் பீம்' புகழ் இயக்குநர்  ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டையன்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


 


ஜெயிலர் படத்திற்கு பிறகு 'லால் சலாம்' படத்தின் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் 'வேட்டையன்' படத்தில் அவரை ஹீரோவாக  பார்க்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மனசிலாயோ...'பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை தெரிவித்து இருந்தனர். இந்த பாடலின் மேக்கிங் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி படு வைரலானது. தற்போது படக்குழுவே அந்த பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 


 


அந்த வகையில் 'வேட்டையன்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான மனசிலாயோ... பாடலின் லிரிகள் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை AI மூலம் பயன்படுத்தி உள்ளனர். அவருடன் இணைந்து யுகேந்திரன், தீப்தி சிங் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளனர். 


 






 


மறைந்த பிரபலமான பின்னணி பாடகர்களின் குரலை AI தொழில்நுட்பம்  மூலம் பயன்படுத்துவது இன்றைய ட்ரெண்ட். லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்கள் ஷாஹுல் ஹமீது மற்றும் பம்பா பாக்கியா குரல் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதே போல சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தி கோட்' படத்தில் கூட மறைந்த நடிகை பாவதாரிணியின் குரல் பயன்படுத்தப்பட்டு இருந்தது கவனம் பெற்றது.