சூர்யாவை வைத்து 2021ஆம் ஆண்டு இயக்கிய ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா தாண்டி பிரபலமானவர் இயக்குநர் த.செ.ஞானவேல் (TJ Gnanavel). தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘வேட்டையன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆண்டு வெளியாகும் இவரது வேட்டையன் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளன.
‘இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்’
இந்நிலையில் வரும் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இந்தியா கூட்டணிக்கு வாக்கு செலுத்தம்படி கோரி இயக்குநர் த.செ.ஞானவேல் பதிவிட்டுள்ளார்.
“வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. வருங்காலத் தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற, பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நம் கடமை. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.
மாநில உரிமை, மொழி உரிமை, கருத்துரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும் காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிகும்படி நானறிந்த என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம் சூர்யாவை தாக்கிப் பேசிய அண்ணாமலை
சமீபத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவைத் தாக்கிப் பேசும் வகையில் “சமூக நீதி படம் எடுத்துவிட்டு மும்பையில் போய் உட்காந்து கொள்வார்கள். சும்மா நடிப்பார்களா? பணம், எல்லாம் பணம்” என தமிழ்நாடு பாஜக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பேசி இருந்தார். மேலும், அதிகார துஷ்பிரயோகம், காவல் துறை நிகழ்த்தும் அடக்குமுறை ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் வெளியானபின், குறிப்பிட்ட சமூகத்தினரை இப்படத்தில் இழிவுபடுத்தியதாக கடும் சர்ச்சைகள் கிளம்பி ஓய்ந்தன.
இந்நிலையில், தற்போது ஜெய் பீம் இயக்குநர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளது சினிமா, அரசியல் வட்டாரங்களில் கவனமீர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மாலையுடன் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவுபெற்று, நாளை மறுநாள் (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிதேசங்களின் 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.