தமிழ் சினிமாவில் இன்றைய நிலவரத்தில் 4 தயாரிப்பு நிறுவனம் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

Continues below advertisement

ஒரு நேர்காணலில் பங்கேற்ற திருப்பூர் சுப்பிரமணியமிடம், “இன்றைய சினிமாவில் யார் தான் நல்லா இருக்காங்க, யாருக்கு தான் லாபமா இருக்குது?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இன்றைக்கு இல்ல. சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிக லாபமாக இருப்பது நடிப்பவர்களும், டெக்னீசியன்களும் தான். இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாரும் நிறைய சம்பளம் வாங்குவதால் ஒரு வருடம், ஒன்றரை வருடத்திற்கு ஒரு படம் பண்ணுகிறார்கள். இரண்டு வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் சம்பளத்தில் இருந்து இறங்கி வர மாட்டார்கள். இனி அவர்களை வைத்து படம் எடுக்க சினிமாவில் யாரும் இல்லை. 

லைகா நிறுவனம் ஒரு பெரும் தொகையோடு தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வந்தார்கள். அதன்படி எல்லா படத்தையும் வெளியிட்டார்கள். அவர்களின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் மட்டும் தான் உள்ளது. ஏனென்றால் பெரிய நடிகர்களுக்கு அவர்களால் சம்பளம் தர முடியவில்லை. அதேபோல் சன் பிக்சர்ஸ் வருடம் ஒரு படம் தான் பண்ணுகிறார்கள். இதைத் தவிர ஏஜிஎஸ், வேல்ஸ் பிலிம்ஸ் மட்டும் தான் இருக்கிறார்கள். 

Continues below advertisement

இவர்களை தவிர யாரும் படம் தயாரிப்பதில்லை. ஏற்கனவே 2025ல் படம் எடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள் விற்பனையாகாமல் 2026க்கு தள்ளி போயுள்ளது. கார்த்தி, சூர்யா போன்றோர் அவர்களின் குடும்பத்திற்குள் தயாரிக்கும் படங்களில் நடித்துக் கொள்கிறார்கள். வெளிபடம் பண்ணுவதில்லை. 

முதலில் தமிழில் ஒரு படம் பூஜை போட்ட அன்றே தமிழ்நாடு உரிமை விற்று விடும். இன்று அப்படிப்பட விநியோகஸ்தர்களே இல்லை. 1979 காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஏரியாவிலும் 150 விநியோகஸ்தர்கள் இருப்பார்கள். இப்போது யாரும் இல்லை. 

அதற்கு காரணம் எல்லா தியேட்டர்களிலும் ஒரே படத்தை போட்டது. இதனால் சொந்த பணம் குறைவான முதலீடு செய்து, தியேட்டரில் முன்பணம் பெற்று படத்தை வாங்குவார்கள். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் விநியோகஸ்தர்கள் இல்லாமல் போய் விட்டார்கள்.  2004-2005 காலக்கட்டத்தில் விஜய், அஜித் போன்றவர்கள் 2,3 கோடி என்ற கணக்கில் தான் சம்பளம் பெற்றார்கள். மற்றவர்கள் லட்சத்தில் சம்பளம் பெற்றார்கள்.

ஓடிடி வந்த பிறகு ரூ.50 கோடி சம்பளம் பெற்றவர்கள் ரூ.200 கோடி கேட்டார்கள். அதுவும் 2023-2024 காலக்கட்டத்தில் தான் இவை அனைத்தும் நடந்தது. 2025 ஆரம்பத்தில் ஓடிடி கம்பெனிகள் ஒன்று சேர நிபந்தனைகள் விதித்தார்கள். இப்போது நடிகர்களால் சம்பளத்தை குறைக்க முடியவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்” என கூறியுள்ளார்.