ஓடிடி தளங்கள் வருகைக்கு பின்னரே சினிமா அழிய தொடங்கியதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஓடிடி தளங்கள் வந்த புதிதில் ஒவ்வொரு படத்துக்கும் அளவுக்கு மீறிய அளவில் விலை கொடுத்து வாங்கினார்கள்.இதனால் தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை அதிகப்படுத்தினார்கள். கடந்த 3 மாதங்களாக எந்த ஓடிடி தளங்களும் எந்த படத்தையும் வாங்குவதே இல்லை. தயாரிப்பாளர் ஓடிடியில் படம் விற்பனையாகி விடும் என ஒரு சம்பளம் பேசி, தயாரிப்புக்கான செலவையும் பண்ணி விடுகிறார்கள். ஆனால் இப்போது தயாரிப்பாளர்கள் படத்தையும் ரெடி பண்ணி விட்டார்கள். ஆனால் யாரும் வாங்க வரவில்லை.
அதனால் அந்த படங்கள் ரிலீசாகாமல் தேங்கி நிற்கிறது. போன வாரம் கூட அகண்டா 2 படம் பைனான்ஸ் பிரச்னையால் ரிலீசாகவில்லை. அந்த பிரச்னை எப்படி வருகிறது என்றால் அந்த தயாரிப்பாளரால் படத்தை நினைத்த விலைக்கு ஓடிடியில் விற்க முடியவில்லை. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் வருகிறது. இதன் காரணமாக சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை.
இப்போது தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் உச்ச நடிகர்கள் நடித்த 10 படங்கள் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. ஓடிடி தளங்களும், சேட்டிலைட் சேனல்களும் படத்தை வாங்குவதற்கான விலை பேச வரவில்லை. அதனால் வெறும் தியேட்டர் ரிலீசை மட்டும் ஒன்னும் பண்ண முடியாது. ஓடிடியை நம்பி இவங்க பெரிய அளவில் செலவில் செய்து விடுகிறார்கள்.
ஒரு படத்திற்கு ரூ.100 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் அதில் ரூ.80 கோடி வரை நடிகர்கள் தொடங்கி டெக்னீசியன் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த தொகையை ஓடிடி தளத்தை அடிப்படையாக வைத்து கொடுக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் பெரிய நடிகர்கள் படம் எதுவும் வெளிவரவில்லை. ஏனென்றால் ஓடிடி நிறுவனங்கள் டிமாண்ட் செய்கிறது. 2026 பொங்கலுக்கு வெளியாகக்கூடிய படங்களே இந்தாண்டு தீபாவளிக்கு வர வேண்டியவை. எங்களிடம் பட்ஜெட் இல்லை. நீங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸ் பண்ணுங்கள் என சொல்வதால் அப்படி செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
எனவே இதனால் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பூஜை போடு அத்தனை படங்களும் 100 நாட்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என முடிவெடுத்துள்ளதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழ் சினிமா மிக மோசமான சூழலை சந்தித்துள்ளது. இனி வரும் காலங்களிலாவது எல்லா படமும் வெற்றியடைய வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.