நடிகர் அஜித்தின் அடுத்தப்படம் ஏன் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில், ‘அஜித்தின் அடுத்தபடம் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு விஜய் சினிமாவை விட்டு விலகியது தான் காரணம் என ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. அதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருப்பூர் சுப்பிரமணியம், ”போட்டிக்கு ஆள் இல்லை என்பதால் அஜித்தின் அடுத்தப்படம் ஆரம்பிக்கப்படாமல் கிடையாது. அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க இன்றைக்கு இங்க தயாரிப்பாளர் இல்லை.
யார் இருக்கிறார்கள் என யாராவது ஒருவரைக் கைகாட்டுங்கள் பார்க்கலாம். ரூ.300 கோடி போட்டு படம் எடுக்க ஆள் இருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், வேல்ஸ், ஆர்.பி.சௌத்ரியால் கூட அந்த படத்தை எடுக்க முடியும். ஆனால் ரூ.300 கோடிக்கு வியாபாரம் ஆகாது. அப்படியே அவ்வளவு ரூபாய் போட்டு நீங்கள் படம் எடுத்தாலும் கண்ணுக்கு தெரிந்து தியேட்டர் வியாபாரம் இல்ல, சேட்டிலைட் வியாபாரம் இல்ல, OTT வியாபாரம், ஆடியோ வியாபாரம் என எதுவும் கிடையாது” என கூறியுள்ளார்.
சமீபத்தில் கூட இசையமைப்பாளருக்கு கூட சம்பளம் இல்லாமல் ஆடியோ உரிமையை கொடுப்பதாக கேள்விப்பட்டேன். ஹீரோவுக்கு கூட சம்பளத்திற்கு பதில் தமிழ்நாடு உரிமையை எடுத்துக்கோங்க என சொல்லும் நிலை வரும். இனி சினிமா இப்படித்தான் செல்லும். அதேபோல் பொங்கலுக்கு கடந்த காலங்களில் பேட்ட - விஸ்வாசம்.துணிவு - வாரிசு ஆகிய படங்கள் வந்தது. ஏதோ இந்த முறை தான் புதிதாக படம் வெளியிடுகிறார்கள் என்பது போல பேசுகிறார்கள். தனியாக வந்தால் படம் வசூல் நன்றாக இருக்கும் என கூறுவதை ஒப்புக்கொள்ளலாம். எனினும் படம் ரிலீஸ் செய்வதை தயாரிப்பாளர் தான் முடிவெடுக்கிறார்” என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
அஜித்தின் அடுத்தப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். அவருக்கு 2025ம் ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் வெளியானது. இதில் குட் பேட் அக்லி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தையும் அவர் தான் இயக்கப்போகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அஜித் கடந்த 8 மாத காலமாக கார் பந்தயத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். அவரின் அடுத்தப்படம் 2026 தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் ஷூட்டிங் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. படத்துக்கான முன்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமாரைப் பொறுத்தவரை அவருக்கு சினிமா மற்றும் கார் பந்தயம் இரண்டின் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு உள்ளது. எனினும் சம்பள விஷயம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது ஒரு கார் பந்தய வீரராக இருக்கும் அவர் அதற்காக சினிமாவை விட்டுக்கொடுக்கவும் தயங்க மாட்டார் என அவர் ரசிகர்களே நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.