இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் திமுக எம்.பி திருச்சி சிவா பாரதிராஜாவுக்கு தான் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற திட்டமிட்டிருந்ததாகவும் அவரது இறப்பால் தனது ஆசை நிறைவேறாமல் போனது குறித்து திருச்சி சிவா வருத்தம் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

பாரதிராஜா குறித்து திருச்சி சிவா 

தனது எக்ஸ் பக்கத்தில் திருச்சி சிவா "தேனி மாவட்டத்தில் வைகை அணைக்கு அருகே உள்ள, பெரிய அளவில் வெளியே தெரியாத சிற்றூர்களில் இருந்து புறப்பட்ட மூன்று இளைஞர்கள், தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி இராஜ நடை போட்ட காலத்தில் திரையரங்குகள் நிறைந்து வழிந்தன. கலையுலகில் அவர்களின் புதிய பாதை, புதிய சிந்தனை, புதிய படைப்புகள், புது முயற்சிகள் ஏற்படுத்திய அதிர்வலைகளின் காரணமாக இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா, கவிப் பேரரசு வைரமுத்து என தமிழ்நாடு அவர்களை பட்டம் சூட்டிப் பரவசப்பட்டது. திரையுலகின் இந்த மூவேந்தர்களின் தலைவரைப் போல் “என் இனிய தமிழ் மக்களே!” என மிடுக்கோடு, கரகரப்பான, கட்டிப்போடும் கம்பீரமான குரல் வளத்தோடு, கூப்பிய கரங்களோடு மக்களின் மனத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்திருந்த பாரதிராஜா, எண்ணிலடங்கா புதுமுகங்களை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தி, அவர்களின் பன்முகப் பரிமாணங்களை வெளிக்கொணர்ந்த பிதாமகன், பல புதிய இயக்குநர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கலைத்தாயின் வயிற்றில் கருவாகி, அல்லி நகரத்தில் உருவாகி, தமிழ்நாட்டின் திருவாகி வலம் வந்த இயக்குநர் பாரதிராஜா உடலால் இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

என் மீது அளவிலா அன்பு கொண்டவர். என் பாராளுமன்ற மற்றும் பொதுமேடைகளின் உரைகளை கேட்டு என்னை அழைத்து, நிறைந்த உள்ளத்தோடு, வாய் நிறைய பொய்யும், புனைவுமில்லா வார்த்தைகளோடு, பாராட்டுகின்றவர். பின்னணி பாடகி திருமதி பி சுசீலா, கவிஞர் வாலி, இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன் போன்ற பல பிரபல திரைக் கலைஞர்களை அழைத்து ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டி பாராட்டு நடத்திய நான் நடத்தும் “கலைப்பேரவை” அமைப்பின் சார்பில் ஒரு விழா “டைரக்டருக்கு” நடத்த இயலாமல் போனது ஒன்றுதான் நிறைவேறாமலே போன என் ஒரே ஆசை. அதற்கான இசைவையும் அவரிடம் பெற்று, பாராட்ட வரும் கலைஞர்களின் பட்டியலை அவர் மகன் நடிகர் மனோஜோடு திட்டமிட்டு கொண்டிருந்தபோது அவர் எதிர்பாராமல் மறைந்தார். அவருடைய பிரிவின் காரணத்தால் மனம் உடைந்ததோடு, முதுமையாலும், ஏற்கெனவே இருந்த நோயின் பாதிப்பு கூடியதாலும் இயக்குநரின் உடல்நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.

Continues below advertisement

அவர் மீது அளவற்ற அன்பு கொண்ட டாக்டர் நடேசன் நடத்தி வரும் “பாரதிராஜா மருத்துவமனையில்” இயக்குநரை நான் பார்க்க சென்றபோது பேசும் திறன் இழந்திருந்தார். ஆனால் பற்றிய கரங்களின் இறுக்கத்தின் மூலமாகவும், விழிகளில் வழிந்த கண்ணீரின் வழியாகவும் வெளிப்படுத்திய உணர்வுகள் வார்த்தைகள் உரைக்க முடியாது. இயற்கையானதுதான் மரணம். அவருடைய உடல்நிலையும் அதை எதிர்பார்க்க வைத்ததுதான். ஆனாலும் மனம் ஏற்க மறுக்கிறது. திடீரென்று ஒரோ வெறுமை சூழ்ந்தது போல் இருக்கிறது. எதிலும் கவனம் செல்லவில்லை. அவர் உடலால் மட்டுமே இல்லை என்பதும் காலமெல்லாம் அவர் படைப்புகளின் மூலமும் எங்கள் பாரதிராஜா வாழ்ந்து கொண்டேயிருப்பார் என்பது மட்டுமே ஆறுதல். கவிஞர் கண்ணதாசனின் வரிகள் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” எங்கிருந்தோ ஒலிக்கிறது. கள்ளிக்காடு தந்த கலைப் பொக்கிஷமே! போய் வா! உன் நினைவுகளும், படைப்புகளும், உன் கம்பீரமும், எங்களோடு என்றென்றும் இருக்கும்!" என பதிவிட்டுள்ளார்