தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அவர் கோட் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறிவிட்டார்.
துப்பாக்கி படத்தில் கவுண்டமணி - செந்தில்:
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ஆல் டைம் பேவரைட் படம் ஆகும். இந்த நிலையில், இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் மும்பை காவல்துறையினருக்கு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கவுண்டமணி – செந்தில் வாழைப்பழ காமெடியை நடிகர் விஜய் இந்தியில் நடித்துக் காட்டுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் எடிட்டிங்கில் இந்த காட்சிகள் அகற்றப்பட்டுள்ளது. கவுண்டமணி கூறும் உன்னிடம் இரண்டு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னேன். ஒன்று இங்குள்ளது. மற்றொன்று எங்கே? என்று நடிகர் கவுண்டமணி செந்திலிடம் கேட்கும் காட்சியை விஜய் இந்தியில் மும்பை காவல்துறையினருக்கு நடித்துக் காட்டுகிறார்.
கலக்கிய விஜய்:
கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்த காமெடி இன்றளவும் கவுண்டமணி – செந்திலின் காமெடிகளில் முதலிடம் பிடித்து வருகிறது. இந்த காட்சியில் விஜய் தனக்கே உரிய உடல்மொழியில் அற்புதமாக நடித்திருந்தும் இந்த காட்சி படத்தில் இடம்பெறாமல் போனது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமர்ஷியல் ஹிட் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த விஜய்க்கு துப்பாக்கி படம் மிகப்பெரிய கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக மாறி அவரை மீண்டும் வசூல் நாயகன் பாதைக்கு மாற்றியது. கலைப்புலி தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால் சத்யன், வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரூபாய் 125 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிகர் விஜய் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ராணுவ வீரர்கள் நண்பர்களுடன் தீவிரவாத சதித்திட்டத்தை நடிகர் விஜய் எப்படி முறியடிக்கிறார்? என்பதே இந்த படத்தின் கதையாகும்.