மனோஜ் பாரதிராஜா இயக்குநர் அவதாரம் எடுக்கும் மார்கழி திங்கள் படப்பிடிப்பில் இடி தாக்கிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பாரதிராஜாவின் மகன், பிரபல நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’ . ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 


புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக பழனியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மார்கழி திங்கள் ஷூட்டிங் தளத்தில் இடி தாக்கியத் தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.


இதுகுறித்து படத் தயாரிப்பாளர் பகிர்ந்துள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது: :“மார்கழி திங்கள்’ படப்பிடிப்பு பழனி பக்கத்தில் உள்ள கனக்கம்பட்டி எனும் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு காட்டுக்கோயிலில் படம் எடுத்து வந்தோம். பகலில் அதை முடித்துவிட்டு, பின் மக்காச்சோளக் காட்டுக்குள் பெரும் கேமராக்கள் வரவழைத்து ஷூட்டிங் நடத்தினோம்.


திடீரென்று பார்த்தால், பயங்கர மழை, இடி, புயக காற்று. நாங்கள் அனைவரும் ஸ்தம்பிச்சிட்டோம். பெரிய பெரிய லைட்டுகள் எல்லாம் செட்டிற்கு வரவழைத்து படமாக்கிய நிலையில், ஒரு லைட்டின் மீது இடி விழுந்தது, இதில் நல்வாய்ப்பாக 5 லைட் மேன்கள் உயிர் தப்பினர்.


படக்குழுவினர் அனைவரும் இந்த நேரத்தில் ஒத்துழைத்தனர். உதவியவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், பெரும் சேதத்தில் இருந்து மார்கழி திங்கள் படக்குழு தப்பியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






முன்னதாக இப்படத்தின் புதுமுக நடிகர்களான ஷியாம் செல்வன், ரக்‌ஷனா ஆகியோரை இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.  1999ஆம் ஆண்டு தனது அப்பா பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘தாஜ்மஹால்’  படத்தின் மூலம் மனோஜ் நடிகராக அறிமுகமானார்.


அதன்பின் சமுத்திரம், அல்லு அர்ஜூனா, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட பல கோலிவுட் படங்களில் நடித்த மனோஜ், இறுதியாக கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  


இயக்கத்தில் தொடக்கம் முதலே ஆர்வம் கொண்டிருந்த மனோஜ், மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது இயக்குநராக தன் முதல் படத்தைத் தொடங்கி இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு மனோஜ் பாரதிராஜா முன்னதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.