தமிழ்த்திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை.  தன் தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில், அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஷெரின் நடித்திருந்தார் அவரும் இப்படத்தில் தான் அறிமுகம். டீன் ஏஜ் பருவத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டது தான் இந்தப் படம்.


செலிபிரிட்டி காம்போ :




தனுஷ், செல்வராகவன், யுவன் என இன்று திரையுலகிலன் ஜாம்பவான்களாய்த் திகழும் மூவர், 20 ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர். இந்த ஜாம்பவான்களின் படைப்புக்கு இன்று இருக்கும் மவுசு அன்று இல்லை. இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் படத்தை பற்றி பேசியதில் சிறுபாகம்  கூட நடிகர் தனுஷைப்  பற்றி யாரும் பேசவில்லை. இதெல்லாம் ஒரு மூஞ்சியா இவன்லாம் ஹீரோவா என்று பல விமர்சனங்கள் தனுஷுக்கு எழுந்தன. ஆனால் நடிகர் தனுஷின் அண்ணனும், சினிமா ஆசிரியருமான இயக்குனர் செல்வராகவன், தனுஷை உருவ கேலி செய்தவர்களே அவரை வியந்து பார்க்கும்படி ஆளாக்கிவிட்டார் என்பதை விட, ஸ்டார் ஆக்கிவிட்டார் என்றே கூற வேண்டும். 


திரைத்துறையில் பல்வேறு அவதாரங்கள் :




பன்னிரண்டாம் வகுப்பு பையனாக திரையுலகுக்குள் நுழைந்த தனுஷ்,  தோற்றத்தில் இன்றும் பன்னிரண்டாம் வகுப்பு பையன் போலவே காட்சியளிக்கிறார். துள்ளுவதோ இளமை இயக்குனரும் நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா, தெலுங்கு நடிகர் உதய்  கிரண் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக படத்தில் நடிக்க முடியாமல் போக, வேறு வழியின்றி தன் மகன் நடிகர் தனுசை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டிருக்கிறது. படிப்பின் மீது அதிகம் நாட்டமில்லாத தனுஷ்,  திரை உலகில் அரைமனதோடு காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகர், பாடலாசிரியர், பாடகர் என திரைத்துறையில் பல்வேறு அவதாரங்கள் எடுத்துள்ளார் தனுஷ்.


மீண்டும் டிஜிட்டல் வெளியீடு !


இந்த படம் 2002 ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று வெளியானது. வெளியான 20 வருடங்களுக்கு பிறகு, அதே நாளில் இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் இன்று தியேட்டரில் வெளியாகிறது. குருராஜா இன்டர்நேஷனல் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடுகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெளியாகியிருக்கும்  இப்படம்  மொத்தம் 25 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.பொதுவாக செல்வா படங்கள் அனைத்தும் வெளிவரும் சமயத்தில் பெரிதும் பேசப்படாமல் ஒரு 20 ஆண்டுகள் கழித்து பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த பட்டியலில் இந்த படமும் சேர்ந்து விட்டது போல தற்போது 20 வருடம் கழித்து இப்படம் மீண்டும் வெளியாகியுள்ளது.