தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தக்ஃலைப். நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக்ஃலைப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஏமாற்றிய தக்ஃலைப்?
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, வடிவுக்கரசி, அசோக்செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியதால் இந்த படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை போதியளவு பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜனும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கும்பலோடு கும்பலாக சேர்ந்து தாக்கிய பா.ஜ.க.:
இந்த நிலையில் தக்ஃலைப் படம் இன்று வெளியானது. ஆனால், இந்த படம் பெரியளவு ரசிகர்களின் வரவேற்பை பெறாத நிலையில், இந்த படத்தை இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அவர்களுடன் பா.ஜ.க.வைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் படத்தை விமர்சித்து வருகின்றனர்.
சிலர் இந்த படம் நல்ல வேளை கர்நாடகாவில் வெளியாகவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். சிலர் மணிரத்னம் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை என்று விமர்சித்துள்ளனர்.
சிலர் அதே கேங்ஸ்டர் படம், அதே பழைய பழிவாங்கும் படலம், அதே பழைய கிளைமேக்ஸ், அதே பழைய ட்விஸ்ட் இதனால் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நடிகராக மட்டுமின்றி மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவராகவும் உள்ள கமல்ஹாசன் தற்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ளார். அவருக்கான தொகுதி பங்கீட்டின்படி அவருக்கு ராஜ்யசபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.