‛‛ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி’’




இந்த பாடலையும், பாடல் வரிகளையும் பல தேர்தல் பிரச்சாரங்களில் நீங்கள் கேட்டிருக்கலாம். எம்.ஜி.ஆர்., என்கிற சகாப்தம், விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களில், அவரின் பாடல்களும் ஒன்று. இன்றும் அது பலருக்கு பயன்படுகிறது. தேவர் ப்லிம்ஸ் தயாரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1964 அக்டோபர் 25 இதே நாளில் வெளியானது தொழிலாளி திரைப்படம். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இத்திரைப்படத்தில், எம்ஜிஆர்.,க்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா, ரத்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 


எம்.ஜி.ஆர்., ஏழைப்பங்காளன் என்கிற தோற்றம் அனைவரும் அறிந்ததே, அதே எம்.ஜி.ஆர்., அனைவருக்குமானவர் என்பதை தெரியப்படுத்த எடுக்கப்பட்டதே தொழிலாளி திரைப்படம் என்று கூறுபவர்களும் உண்டு. தொழிலாளி திரைப்படம், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.  ஒரே கையெழுத்தில் தன் போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குகிறார் முதலாளி. 



தங்கள் வாழ்வாதாரத்தை அழித்த முதலாளிக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் கையில் எடுக்கும் போராட்டமும், அதற்கு எம்.ஜி.ஆர்., செய்த முயற்சிகளும் தான் கதை. முதலாளிகளுக்கு எம்.ஜி.ஆர்., கற்றுத்தந்த பாடம் என்ன? வேலை இழந்த தொழிலாளர்களின் நிலை என்ன? அதற்காக எம்ஜிஆர் கையில் எடுத்த ஆயுதம் என்ன? என சுவாரஸ்யமான திரைக்கதையில் படம் நகரும். 


இறுதியில் தொழிலாளர் கூட்டுறவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, எந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கினார்களோ அதே முதலாளிகள் அதை ஏற்று நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கி தொழிலாளிகளின் தோழனாக எம்.ஜி.ஆர்., வெற்றி பெறுவதே ‛தொழிலாளி’ திரைப்படத்தின் மையக்கரு.



கே.வி.மகாதேவன் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கருப்பு வெள்ளை படமான தொழிலாளி, அன்றைய தினம் வெளியாகி, தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. முதலாளித்துவத்திற்கு எதிரான எம்.ஜி.ஆர்.,யின் சாட்டை என்றும் புகழப்பட்டது. சிறப்பு மிக்க அந்த திரைப்படம், இன்று, இதே நாளில் 58 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்றது. 


‛‛இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி..’’


என்கிற பாடல் வரிகள் தான், எம்.ஜி.ஆர்., இப்படத்தின் மூலம் சொல்ல வந்த விசயம் என்பார்கள், விபரம் தெரிந்தவர்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண