விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் குறித்து பேசுகையில், பன்றியா? நாயா? என்பதுதான் போட்டி. இதுவரை மான் குட்டியைக் கொஞ்சுவார்கள், நாய்க்குட்டியைக் கொஞ்சுவார்கள், பூனைக்குட்டியைக் கொஞ்சுவார்கள் முதல் முறையாக ஒரு படத்தில் பன்றிக்குட்டியைக் கொஞ்சுகின்ற காட்சி. ஒரு தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த பெண், கதாநாயகனைக் காதலிப்பதாலே பன்றிக்குட்டிக்கு முத்தமிடுகிறார். காதல் எப்படியெல்லாம் செய்யவைக்கிறது பாருங்கள். பன்றிக்குட்டிக்கு முத்தமிடுகிறார் கதாநாயகி, ஏனென்றால் அந்த பன்றிக்குட்டியை நேசிக்கிறவன் கதாநாயகன். நீ எதை இழிவு என கூறுகிறாயோ அதை நான் உயர்வாக காட்டுவேன், எதை அருவறுப்பு என கூறுகிறாயோ அது எனக்கு நாகரீகம்.
முதலமைச்சரைச் சந்திக்க சட்டமன்ற உறுப்பினர் மாமன்னன் தன் மகனுடன் செல்கிறார், முதலமைச்சர் மாமன்னனை மட்டும் வரச்சொல்லும் போது, வெளியில் காத்திருக்கும் மகனுக்கு அப்பா முதலமைச்சர் முன் நின்று பேசுகிறாரோ என்ற எண்ணத்தில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்க்கையில் தனது அப்பா, முதலமைச்சர் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த பின்னர் அமைதி அடைவான் கதாநாயகன். இந்த காட்சியை மாரி செல்வராஜ் படமாக்கியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் அவர் உள்வாங்கியுள்ள அம்பேத்கரியம் தான். நாற்காலியில் உட்காருவதா? நிற்பதா என்பது குறித்து எல்லோரும் பார்த்துக்கொண்டு இருந்தோம். எந்த இயக்குநருக்காவது, ’அப்பா உட்காரு’ எனச் சொல்லி படம் எடுக்கும் துணிச்சல் வந்ததா? அப்பா உட்காருப்பா என்கின்ற குரல் தான் மாமன்னன் படத்தின் குரல். ஏனென்றால் இயக்குநரின் உள்ளத்தில் அம்பேத்கரிய சிந்தனை உள்ளது. இடது சாரி சிந்தனை உள்ளது. படத்தின் முதல் காட்சியே அம்பேத்கர் படம், பெரியார் சிலை, சேகுவேரா படம், புத்தர் சிலை இதுதான் இடதுசாரி அரசியல். இதுதான் சமத்துவ அரசியல்.
இம்மானுவேல் சேகரன் படுகொலை
படம் கூறியிருப்பது, அப்பா உட்காருப்பா என்பது தான். என்னைப் பார்க்க வருபவர்களைக் கூட நான் அமரவைத்து தான் பேசுவேன். சோபாவில் அமர யோசிப்பார்கள். ஆனால், நான் அவர்களை அமர வைத்துத்தான் பேசுவேன். இம்மானுவேல் சேகரனைக் கொன்றார்கள் எதனால்? நாற்காலியில் உட்கார்ந்ததால்தான் படுகொலை நடந்தது என பேசினார். இதற்கு முன்னதாக, மாமன்னன் படத்தில் வரும் தேர்தல் வாக்கு எண்ணுன் காட்சி கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலின் போது எனக்கு நடைபெற்றதை நினைவுக்கு கொண்டு வந்தது என குறிப்பிட்டிருந்தார்.