இன்று நடிப்பால், கதை தேர்வால் கொண்டாடப்படும் தனுஷ். ஆரம்ப காலத்தில் அதிகம் தூற்றப்பட்டவர். ‛இந்த பையன் இப்படிப்பட்ட படத்துல தான் நடிப்பான்’ என பெற்றோர் பலர், தனுஷ் மீது வெறுப்பை கக்கும் அளவிற்கு, அவரது கதை தேர்வு இருந்தது. பெரும்பாலும் இளசுகளை குறிவைத்து, இளசுகளை மட்டுமே குறி வைத்து தான் தனுஷ் தன் கதைகளை தேர்வு செய்த காலகட்டம் அது.
அந்த வரிசையில் வெளியான திரைப்படம் தான் ‛திருடா திருடி’. ஜிகிடி, விரல் நீளம் என என்னன்னமோ வார்த்தைகளை வசனங்களாக வைத்து இளசுகளை இன்புற வைத்த படம். 2003 ம் ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி இதே நாளில் வெளியான திருடா திருடி திரைப்படம். இயக்குனர் சுப்பிரமணியசிவா இயக்கத்தில் , தினா இசையமைப்பில் பேய் ஹிட் அடித்த திரைப்படம்.
குறிப்பாக, தினா இசையில் ‛மன்மதா ராசா...’ பாடல், பட்டி தொட்டியெல்லாம் பட்டை தீட்டியது. தனுஷ்-சாயா சிங் கருப்பு ஆடை அணிந்து ஆடிய அந்த பாடல், அது ஒரு அடையாளமாகவே, இன்றைய தினம், சேனல்கள் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்தும் அளவிற்கு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தின் வெற்றிக்கு இசையும், பின்னணி இசையும் பெரிய பங்கு வகித்தன.
வீட்டுக்கு அடங்காத இளைய மகன், தனக்கு மட்டுமே அடங்கும் எளிய குடும்பத்தின் மகள். இவர்களுக்குள் ஏற்படும் மோதல். அந்த மோதலால் பிரச்னை ஏற்பட்டு, திருச்சியை விட்டு சென்னை குடியேறும் இளைஞன். அங்கும் அதே பெண் வர, அவர்களின் சந்திப்பு எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியது? மோதல் காதல் ஆனதா? பெற்றோரை பிரிந்து வந்த இளைஞன், தந்தையின் நம்பிக்கைய சம்பாதித்தாரா? என்பது தான் கதை.
இந்த கதையை எவ்வளவு கலகலகப்பாக கூற முடியுமோ, அவ்வளவு கலகலப்பாக கூறி, வெற்றியை சொல்லி அடித்த திரைப்படம். தியேட்டர்களில் இளசுகள் பெருங்கடலாக ஆர்ப்பரித்த திருடா திருடி, இன்று இதே நாளில் 19 ஆண்டுகளுக்கு முன் தியேட்டர்களில் டிக்கெட்டிற்கு முண்டியடித்ததை நினைவூட்டுகிறோம்!