ரோகிணி தியேட்டரில், பெரும்பாலான பிரபலங்கள் அவர்கள் நடித்த படத்தை பார்க்க செல்வது வழக்கம் அதுவும் முதல் நாள் முதல் ஷோவிற்கு செல்வது நடந்து வரும் விஷயம். நேற்றிலிருந்து தனுஷ் ரசிகர்கள், அவர் ரோகிணி தியேட்டருக்கு வருவார் என எதிர்ப்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்றது போல், நடிகர் தனுஷ் அனிரூத், நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் உடன் முதல் காட்சி பார்க்க அந்த தியேட்டருக்கு வந்தார்.
தனுஷை பார்த்து ஆர்வம் அடைந்த ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டனர். என்ன செய்வது என்று திகைத்த நடிகர் தனுஷ் ராஷி கண்ணாவின் கைகளை பிடித்து கொண்ட வண்ணம் அங்கிருந்து கிடு கிடுவென ஓடி காரில் போய் அமர்ந்தார். இந்த வீடியோ சமூக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இன்று காலை காட்சியை காண ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். இதனால் மேள தாளங்கள்,கட் அவுட்டுகள், தோரணங்கள் என தியேட்டர்கள் திருவிழா இடமாக மாறியது என்பது குறிப்பிடதக்கது.