நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படமான ‘தென்காசிப்பட்டணம்’ இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


மலையாளப் படத்தின் ரீமேக் 


2000 ஆம் ஆண்டில் மலையாளத்தில் தென்காசிப்பட்டணம் படம் வெளியாகியிருந்தது. சுரேஷ் கோபி மற்றும் லால் ஹீரோக்களாக நடித்திருந்த இந்த படத்தை ரஃபி மெகார்ட் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். இந்த படம் 2002 ஆம் ஆண்டு தமிழில் அதே பெயரில் அதே இயக்குநரால் ரீமேக் செய்யப்பட்டது. இதில் சரத்குமார், நெப்போலியன், சம்யுக்தா வர்மா , தேவயானி விவேக், அஸ்வதி மேனன், இயக்குநர் பி.வாசு, வினுசக்கரவர்த்தி, சார்லி என பலரும் நடித்திருந்தனர். சுரேஷ் பீட்டர்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


காமெடியான கதைக்களம் 


தென்காசியில் மார்க்கெட் உரிமையாளர்களாக சரத்குமார், நெப்போலியன் முரட்டுத்தனமான குணத்துடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு அஸ்வதி மேனன் என்ற தங்கை உள்ளார். இவரை விவேக் காதலிக்கும் நிலையில், இரு அண்ணண்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். முன்னதாக சரத்குமாருக்கு சம்யுக்தா மேனன் மேல் காதல் இருக்கும் நிலையில், நெப்போலியனையும், தேவயானியையும் சேர்த்து வைக்க நினைக்கிறார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக நெப்போலியனுக்கு சம்யுக்தா மீதும், தேவயானிக்கு சரத்குமார் மீதும் காதல் ஏற்படுகிறது. இந்த குழப்பம் தீர்ந்ததா? கடைசியில் எல்லாம் சுமூகமாக இருந்ததா? என்பது தான் இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 


காட்சிக்கு காட்சி சிரிப்பொலி 


இந்த படத்தில் விவேக் தான் ஹீரோ என்னும் அளவுக்கு காமெடி காட்சிகளில் சார்லியோடு இணைந்து சூப்பராக நடித்திருப்பார். தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவை, அதிரடி போன்ற காட்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் இயக்குநர்கள் ரவி மற்றும் மெகார்டின்.   


மலையாளத்தில் வெளியான பாடல்களின் ட்யூன்களை தமிழுக்கும் சுரேஷ் பீட்டர்ஸ் பயன்படுத்தி இருப்பார். ‘கொஞ்சம் தென்காசி தமிழ் பைங்கிளி’, ‘தேனிருக்கும் கூட்டுக்குள்’, ‘மயிலிறகே மயிலிறகே’ பாடல்கள் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இணைந்தது.