எப்போ மூடுனாங்க என்பதே தெரியாத அளவிற்கு நீண்ட இடைவெளிக்கு பின் இன்று திறந்திருக்கிறது தியேட்டர்கள். திடீர் அறிவிப்பால் தியேட்டர்கள் திறந்தாலும், என்ன படம் இன்று வெளியானது? எவ்வளவு டிக்கெட் வசூலிக்கப்பட்டது? கூட்டம் கூடியதா...? அனைத்தையும் களத்திலிருந்து முதல் காட்சி முதல் ஷோ மாதிரி வழங்குகிறது ஏபிபி நாடு. 


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையல் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையாரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இது குறித்து பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “திரையரங்கம் டிக்கெட் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 1100 திரையரங்குகள் உள்ளன. புதிய திரைப்படங்கள் வெளியாகாததால், இன்று 40% திரையரங்கங்களும், வரும் வியாழக்கிழமை முதல் 100% திரையரங்கங்களும் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார். புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாவதற்கு தயாராக இல்லாத நிலையில், ஆன்லைன் புக்கிங் எதுவும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், பழைய படங்கள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால், சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பெரிய திரைப்படங்களின் வெளியீட்டுக்காக தியேட்டர் உரிமையாளர்களும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.


முக்கியமாக, திரையரங்கிற்கு வருபவர்கள், கொரோனா தடுப்புக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை அல்லது  சிகிச்சை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களும் வெறிச்சோடியே காணப்பட்டது. சுல்தான் போன்ற பழைய திரைபடங்கள் தான் திரையிடப்பட்டது. அதை பார்ப்பதற்கும் யாரும் வரவில்லை. ஆன்லைன் புக்கிங் அரவே இல்லை. தியேட்டர் கவுன்டர்கள் ஈ ஆடின. ஆட்களே வராத போது, பாப்கான், ஐஸ்கிரீம் விற்பனை எப்படி நடக்கும். அதுவும் வெறிச்சோடியே இருந்தது. குறைந்தது 10 பேர் இருந்தால் தான் திரைப்படம் திரையிடப்படும். பல தியேட்டர்களில் 10 பேர் வரவில்லை. பல தியேட்டர்களுக்கு ஆட்களே வரவில்லை. இதனால் பெரும்பாலான திரையங்குகளில் திரையிடப்படவில்லை. 


ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10 , 11 மற்றும் 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மதிய உணவுத்திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி, உயர்வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதனடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்டம்பர் 15-க்கு பிறகு ஆலோசித்து அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 


Covid 19 3rd Wave: அக்டோபர் ஆபத்து....கொடூரமாக இருக்கும் கொரோனா 3வது அலை: மத்திய அரசுக்கு அலர்ட்!