தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துணை கதாபாத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினாலும் முதல் படத்திலேயே அவரின் நடிப்பு பலரையும் ஈர்த்தது.


நிச்சயம் அவர் ஒரு பெரிய நட்சத்திர நடிகராக வருவார் என திரைத்துறையை சார்ந்த பலரும் கணிக்கும் படி இருந்தது. அதே ஆண்டு வெளியான 'பைரவி' படம் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தார். அப்படம் அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்தது. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.


 



சிவாஜிராவ் டூ ரஜினிகாந்த்:


ஒரு பேருந்து நடத்துனராக இருந்த சிவாஜி ராவ் எப்படி ரஜினிகாந்தாக மாறினார் என்பதற்கு பின்னால் ஒரு ஸ்வாரஸ்யமான கதை உள்ளது. அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க சிவாஜி ராவுக்கு வாய்ப்பை வழங்கிய கே. பாலச்சந்தர் அவரின் பெயரை மாற்ற காரணமாக இருந்தார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் சிவாஜி என்ற பெயரில் நடிகர் இருப்பதால்  சிவாஜி ராவ் என்ற பெயரை மாற்றுவது குறித்து யோசனை செய்துள்ளார் பாலச்சந்தர்.


சிவாஜி ராவ் இடமே அவருடைய பெயரை மாற்ற ஆலோசனை கேட்டுள்ளார் பாலச்சந்தர். அதற்கு அவர் தன்னுடைய குடும்ப பெயரான ஆர். கெய்க்வாட் அல்லது சரத் என தன்னுடைய யோசனையை சொல்ல அது  பெரிய அளவில் எடுபடவில்லை. அதனால் தன்னுடைய பெயரை மாற்றி வைக்கும் படி கே. பாலச்சந்தரிடமே கூறியுள்ளார்.


ஹோலியில் பிறந்த ரஜினிகாந்த்:


ஒரு நாள் ஹோலி பண்டிகையன்று கே. பாலச்சந்தர், சிவாஜி ராவ் என்ற பெயரை மாற்றி இன்று முதல் நீ ரஜினிகாந்த் என பெயர் சூட்டியுள்ளார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை தினத்தை தன்னுடைய பிறந்தநாளாக கருதி தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி  வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.


 



சரி இயக்குநர் பாலச்சந்தர் ஏன் குறிப்பாக ரஜினிகாந்த் என பெயரை சூட்டினார் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 'காந்த்' என்பது பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தமான ராசியான பெயர். அவரின் நாடகங்களில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு நாடகம் 'மேஜர் சந்திரகாந்த்'. இந்த நாடகத்தில் மேஜர் சுந்தர்ராஜன் கண் தெரியாத மேஜர். அவரின் இரு மகன்களில் முதல் மகனின் பெயர் ஸ்ரீகாந்த், இரண்டாவது மகன் பெயர் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் பெயரில் ஏற்கனவே பிரபலமான ஒரு நடிகர் இருப்பதால் இரண்டாவது மகனின் பெயரான ரஜினிகாந்த் என்ற பெயரை தான் சிவாஜி ராவுக்கு சூட்டி கட்டியணைத்து கொண்டாராம். இப்படி தான் சிவாஜி ராவ் ரஜினிகாந்தாக மாறினார்.