விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சுனிதா. நடன கலைஞரான இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் ரொம்பவே ரீச் ஆனது. Sunita Xpress என்ற யூடியூப் சேனலை கடந்த மார்ச் மாதம் தொடங்கிய சுனிதா அவ்வபோது தனது டான்ஸ் , மேக்க அப் ரொட்டின், ஃபன் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த சேனலுக்கு இதுவரை நான்கரை லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். சுனிதா பதிவிடும் வீடியோக்கள் எல்லாமே ட்ரெண்டிங்தான். தற்போது லேட்டஸ்டாக அந்த வரிசையில் தன்னுடைய கண்மணி என்னும் அவருடைய செல்லமான காருடன் ஆன பயணத்தை காணொளியாக்கி பதிவிட்டுள்ளார்.



அதில் ஏராளமான சுவாரசிய விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். “என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்ட் என்னுடைய கண்மணிதான். இந்த காரை மனிதரை போலதான் பார்த்துக்கொள்வேன். அப்படிப்பட்ட என்னுடைய இந்த கண்மணியை நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். இந்த ப்ராண்ட் பெயர் பிரீஸா. எனக்கு பிங்க் நிறம் பிடித்தாலும், சிவப்பு நிறம்தான் பளீச்சென தெரியும் என்பதால், என்னுடைய காரை சிவப்பு நிறத்தில் வாங்கிவிட்டேன்” என்று படபடவென தொடங்கி மேலும் சில சுவாரசிய சம்பவங்களையும் கூறினார். “பொதுவாக பெரும்பாலான இளைஞர்கள் கார் வாங்கியதும் அவர்களுக்குப் பிடித்தது போல டிசைன் செய்து கொள்வார்கள். ஆனால், நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாங்கினேனோ அப்படியேதான் இப்பொழுதும் என் காரை வைத்திருக்கிறேன். ஒரு சின்ன மாற்றத்தைக்கூடச் செய்யவில்லை. அவ்வளவு ஏன் விண்டோ ஷீல்டு மேல் இருக்கும் கவரை கூட பிரிக்கவில்லை” என்றபடி அதனை ஜூம் செய்து காட்டினார் சுனிதா. அடுத்ததாக இன்டீரியர் வேலைப்பாடுகள் பற்றி பகிர்ந்துகொண்டார்.



“ட்ரைவிங் தெரிந்ததுபோல சீன் போடுவேன் ஆனால், உண்மையில் எனக்கு கார் ஓட்ட தெரியாது. இந்த வண்டியில் எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் ஹாரன் அடிப்பதுதான். இந்த வண்டிக்கென முதல் முறையாக நான் வாங்கியது குட்டி பிள்ளையார் ஸ்டிக்கர்தான். மேலும், எனக்கு சுத்தமாக இருப்பது அவசியம். அதனால், என் காருக்குள் எந்தவிதமான குப்பையும் இருக்கக்கூடாது என்பதற்காக, உள்ளுக்குள்ளேயே சிறிய டஸ்ட் பின் வைத்திருக்கிறேன். இந்த கார்தான் எனக்கு எல்லாமே. நீண்ட தூர பயணம் மற்றும் ஷூட்டிங் முடிந்து டயர்டாக இருக்கும் வேளையிலும் இதில்தான் படுத்துத்தூங்குவேன். மேக்-அப் போடுவது முதல் என்னுடைய அவ்வளவு பெரிய லக்ஜேஜுகளை சுமப்பது வரை எனக்கென அத்தனையையும் செய்வதற்கு என் கண்மணி உள்ளது.



ஆகமொத்தத்தில் இது என் 'நண்பேன்டா'. எனக்கு எவ்வளவு திருஷ்டி வேண்டுமானாலும் படலாம் ஆனால், என் வண்டிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது” என்றபடி தன்னுடைய ட்ரைவருக்காக காத்திருந்தார். “பொதுவாக ட்ரைவர்தான் காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், என்னுடைய விஷயத்தில் எப்போதும் நான்தான் டிரைவருக்கு காத்திருப்பேன். அதிலும், இந்த காரில் எனக்கு பிடிக்காத பகுதி என் ட்ரைவர் கிழித்து வாய்த்த இந்த ஸ்டியரிங் பகுதி. இந்த பகுதி மட்டும்தான் என் கன்ட்ரோலில் இல்லாத பகுதி” என்றபடி காணொளியை நிறைவு செய்கிறார் சுனிதா.