2023ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் ரிலீஸ், அறிமுக இயக்குநர்களின் என்ட்ரி, ஸ்டார் நடிகர்களின் படங்கள், ஓடிடி  பங்களிப்பு என பட்டையை கிளப்பிய ஒரு ஆண்டாகவே இருந்தாலும் சில சர்ச்சையை தூண்டும் சம்பவங்களும் பஞ்சமில்லாமல் நடைபெற்றன. 


பெரும் சர்ச்சைகள்:


பருத்திவீரன் படத்தை வைத்து அமீர் - கே.ஈ.ஞானவேல் ராஜா இடையே நடைபெற்ற விவாதம், வைரலாக ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக், இமான் சிவகார்த்திகேயன் இடையே நடைபெற்ற மோதல், புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரியின் ஜாமீன், தணிக்கை குழுவுக்கு விஷால் வழங்கிய லஞ்சம், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற வாக்குவாதம் என பல சர்ச்சரவுகள் திரைத்துறையில் ஏற்பட்டு அவை இணையத்தில் ஒரு பேசு பொருளாக மாறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இவை மட்டுமின்றி வேறு சில சச்சரவுகளும் தமிழ் சினிமாவில் நடந்தேறின. அவரில் சிலவற்றை பார்க்கலாம்... 


 



மாமன்னன் Vs தேவர் மகன் :


மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில் தேவர் மகன் படம் தான் இப்படத்தை எடுக்க உந்துதலாக இருந்தது என்றும் இதுபோன்ற கதையில் தனது தந்தையைப் போன்ற ஒரு கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததன் அடிப்படையில் உருவான கதை தான் 'மாமன்னன்' திரைப்படம் என பேசி இருந்தார். அவரின் கருத்துக்கள் வேறு விதமான சர்ச்சையை ஏற்படுத்தியது. தேவர் மகன் திரைப்படம் தவறான ஒரு கருத்தை கொண்டது என அவர் கூறியதாக சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை எழுப்பின.  



ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் நிமிஷா :


2023ல் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது பத்திரிகையாளர் ஒருவர் அப்படத்தில் நடித்த ஹீரோயின் நிமிஷாவை விமர்சிக்கும் வகையில் "அவர் ஒன்றும் அவ்வளவு அழகாக இல்லை ஆனால் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார்" என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் நெட்டிசன்கள் பலரும் பத்திரிகையாளருக்கு எதிராக கண்டிக்கும் வகையில் விமர்சனத்தை முன்வைத்தனர். 


 



ஹன்சிகா மோத்வானி:


பார்ட்னர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரோபோ ஷங்கர் ஒரு காட்சியின் போது ஹன்சிகா தனது கால்களைத் தொடுவதற்கு அனுமதிக்கவில்லை என கூறியவர் படத்தின் ஹீரோ ஆதிக்கு கிடைத்த அந்த பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என கூறியதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். ரோபோ ஷங்கரின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலானது. 


பத்து தல :


சென்னையின் புகழ்பெற்ற ரோகினி திரையரங்கத்தில் நடிகர் சிம்புவின் 'பத்து தல' படம் ரிலீசான போது அப்படத்தை தன் குடும்பத்தினருடன் பார்க்க வந்த பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த  பெண்ணை டிக்கெட் இருந்தும் திரையரங்கில் நுழைய அனுமதி மறுத்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலானது.