சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரள ஸ்டோரி படம் இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி ஜீ ஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 


தி கேரள ஸ்டோரி:


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.  இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேலோங்கி இருப்பதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து மே 5ஆம் தேதி வெளியான இப்படம் கடும் விமர்சனங்களைப் பெற்று சர்ச்சைகளைக் கிளப்பியது.


இந்தியில் உருவான இப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படம் தடைசெய்யப்பட்டது.


வெடித்த போராட்டங்கள்:


பல மாநிலங்களில் இப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாததால் இப்படம் திரையிடப்பட மாட்டாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தெரிவித்து படத்தினை திரையிடுவதை நிறுத்திக் கொண்டன.


மற்றொருபுறம் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் 240 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலைக் குவித்தது.  இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூலைக் குவித்தபோதும் முன்னணி ஓடிடி நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியானது. 


எரிச்சல்:


முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த  தி கேரளா ஸ்டோரி இயக்குநர் சுதிப்தோ சென், எந்த ஓடிடி தளங்களும் தங்களை அணுகவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதுவரை, நாங்கள் பரிசீலிக்கத் தகுந்த எந்த சலுகையும் வரவில்லை. எங்களை  தண்டிக்க திரைப்படத் துறையினர் ஒன்றுகூடி உள்ளனர். எங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரைப்படத் துறையின் பல பிரிவினரை எரிச்சலடையச் செய்துள்ளது.  எங்கள் வெற்றிக்காக எங்களை தண்டிக்க பொழுதுபோக்குத் துறையின் ஒரு பகுதி ஒன்றிணைந்ததாக நாங்கள் உணர்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். 


முன்னதாக தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கேரளா, தமிழ்நாடு அரசுகள் தடை கோரிய நிலையில், “மதச்சார்பின்மை மாநிலமான கேரளாவில், மத தீவிரவாதத்தின் மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சங்பரிவார், இப்படத்தின் மூலம் பிரச்சாரத்தை பரப்ப முயற்சிக்கிறது” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியிருந்தார். 


இன்று ரிலீஸ்:


இதேபோல் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற உலகநாயகன் கமல்ஹாசன் தி கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரத் திரைப்படம் என்றும், தான் பிரச்சாரத் திரைப்படங்களுக்கு முற்றிலும் எதிரானவர் என்றும் கருத்துத் தெரிவித்தைருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் இன்று ஜூ ஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.