சர்ச்சையைக் கிளப்பி வரும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று முதல் தமிழ்நாட்டில் திரையிடப்படாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.
கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்துடன் ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியானது.
சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5ஆம் தெதி திரையரங்குகளில் வெளியானது.
கேரளாவில் இந்து பெண்கள் இஸ்லாமிய மதத்துக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என ட்ரெய்லரிலேயே குறிப்பிடப்பட்ட நிலையில் வெளிவருவதற்கு முன்னரே எதிர்ப்புகள் கிளம்பின. 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் தகவல் ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் என பல்வேறு தரப்பினரும் இந்தப் பட வெளியீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை கோரினர்.
இதனைத் தொடர்ந்து இதற்கு ஆதாரங்கள் சரிவர இல்லை எனக் கூறி ட்ரெய்லரில் எண்ணிக்கையை மூன்றாக இயக்குநர் தரப்பு குறைத்தது. எனினும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேரளா வெடிகுண்டின் மீது அமர்ந்துள்ளது, இஸ்லாமிய மாநிலமாக கேரளா மாறிவிடும் என்பன போன்ற வசனங்களும் இஸ்லாமிய வெறுப்பு காட்சிகளும் படம் முழுக்க நிறைந்திருப்பதாவும் படம் வெளியான பிறகு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கேரளாவில் படத்துக்கு தடைவிதிக்க எதிர்ப்புகள் வலுத்த நிலையில், கேரள உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. அதேபோல் தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என உளவுத்துறை எச்சரித்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் படம் வெளியானது.
தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் காரணமாக மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்நிலையில், படம் வெளியாகி இரண்டே நாள்களில் இனி இந்தப் படம் திரையிடப்படாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்தத் தொடர் போராட்டங்கள் காரணமாகவும், படத்துக்கு வரவேற்பு இல்லாததாலும் இந்தப் படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.