தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் 56.86 கோடிகள் வசூலித்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 66.80 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி ட்ரெய்லர் வெளியானது முதல் பரபரப்பைக் கிளப்பி நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைப் பெற்று வரும் திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
ட்ரெய்லர் வெளியான போதே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் என பல அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலரும் இப்படத்துக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் சித்தி இத்னானி, அடா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தித் திரைப்படமான தி கேரளா ஸ்டோரி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசியதைவிட படத்தில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் படம் வெளியானது முதல் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பல அரசியல் கட்சிகள் இப்படத்துக்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஐந்து நாள்களில் இந்தியா முழுவதும் 56.86 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் தகவல்கள வெளியிடும் sacnilk தளத்தின்படி முதல் நாள் 8.03 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 11.2 கோடிகளும், மூன்றாம் நாள் 16.4 கோடிகளும், நான்காம் நாள் 10.07 கோடிகளும், ஐந்தாம் நாள் 11.14 கோடிகளும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் இப்படம் 66.80 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் 'தி கேரளா ஸ்டோரி' பிரச்சாரப் படம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை அடா ஷர்மா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து இதனை மறுத்து வருகின்றனர். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு மாற்றப்படும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம் எனவும் முன்னதாக நடிகை அடா ஷர்மா தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இப்படத்துக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் முதல் இரண்டு நாள்களுக்குப் பிறகு படம் இனி திரையிடப்படாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.