வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கோட்'. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மோகன், ஜெயராம், பிரேம்ஜி, அஜ்மல் என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில் வழக்கமாக விஜய் பாடல்களுக்கு கிடைக்கும் ரீச் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. படத்தின் டிரைலர் இப்போ வருமோ எப்போ வருமோ என ஒவ்வொரு நாளும் மிகவும் ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் 'தி கோட்' படம் வெளியாக இருப்பதால் டிரைலரை பார்க்க வேண்டும் என ஆர்வம் மக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. அந்த வகையில் அது குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்ற அறிவிப்பை படக்குழு நேற்றைய தினம் வெளியிட்டது. படம் வெளியாக இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதால் பரபரப்புடன் காணப்படுகிறது.
விஜய் படங்கள் என்றாலே அவ்வப்போது அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் இந்த முறை ரசிகர்கள் அதை மிஸ் செய்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆடியோ லாஞ்சிலும் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரி கேட்க மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இந்த முறை அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 'தி கோட்' படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த படக்குழு பிளான் எதுவும் செய்யவில்லை என கூறப்பட்டது. இதுவும் ஒரு வகையில் ஏமாற்றமாகவே இருந்தது.
இந்நிலையில் 'தி கோட்' படத்தின் கதை குறித்த அப்டேட் ஒன்றை வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ஒரு கற்பனை கதை என்றாலும் அது உண்மையான கதைக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் துணிச்சலாக செயல்பட்ட ஒரு ஸ்பெஷல் ஆன்டி டெரரிஸ்ட் ஸ்குவாட் (SATS) டீம் ஒன்று RAW அமைப்புடன் இணைந்து பணியாற்றியது. கடந்த காலத்தில் துணிச்சலாக செய்த செயல் ஒன்று தற்போது பிரச்சனையாக நிகழ் காலத்தில் வந்து நிற்கிறது.
அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி காண்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மேலும் பல சஸ்பென்ஸ்களும் ஸ்வாரஸ்யங்களும் நிறைந்துள்ளன. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என வெங்கட் பிரபு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்டோரி லைன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக அமைந்தது. மேலும் இன்று மாலை டிரைலர் அப்டேட்டுக்கு அனைவரும் வெயிட்டிங்.