கிரிக்கெட்.. இந்தியாவில் அன்றும் இன்றும் என்றும் சற்றும் குறையாத மக்கள் அபிமானம் பெற்ற விளையாட்டு. கிரிக்கெட் வீரர்களைக் கடவுளாகக் கொண்டாடும் தேசம் இது. கபில் தேவ், அசாருதீன் தொடங்கி இன்றைக்கு ஹர்திங் பாண்டியா வரை இந்திய ரசிகர்களால் கொண்டாடாப்படுகின்றனர்.


அதனால் தான் மக்களிடம் ஒரு பொருளைக் கொண்டு சேர்க்க கிரிக்கெட் பிரபலங்களை விளம்பர மாட்லகளாக பயன்படுத்துகின்றனர். ஊதுவத்தி தொடங்கி உணவுப் பண்டங்கள் வரை கிரிக்கெட் வீரர்கள் இல்லாத விளம்பரங்களைப் பார்க்க முடியாது. கிரிக்கெட் பின்னணியைக் கொண்டாவது விளம்பரங்களைத் தயாரித்து விடுவர். அப்படி 1990-களில் கிரிக்கெட் விளையாட்டு மைதான நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட விளம்பரம் தான் கேட்பரிஸ் சாக்கலேட் விளம்பரம்.


வீரர் ஒருவர் 99 ரன் அடித்துவிட்டு சதத்துக்காக பந்தை பவுண்டரிக்கு விரட்ட அதே உயரேப் பறந்து க்ளியர் கேட்ச்சுக்கான பந்து போல் பாய பவுண்ட்ரி லைனில் ஃபீல்டர் கால் வைக்க பந்து பவுண்ட்ரியைக் கடந்து விடும். இத்தனையையும் கேலரியில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் இளம் பெண் ஒருவர் மான் போல் வேலியைக் கடந்து வாட்ச்மேனுக்கு போக்குகாட்டிவிட்டு மைதானத்தில் வளைந்து நெளிந்து கேட்பரிஸ் சாக்லேட்டைக் கடித்தவாறு ஆடுவார். அந்த விளம்பரத்தை 90ஸ் கிட்ஸ் மறந்திருக்க முடியாது. அந்த விளம்பரப் படத்தில் நடித்த மாடல் ஷிமோனா ராஷியும் அவ்வளவு பிரபலமானார்.




அந்த விளம்பரத்தைத் தயாரித்த ஆகில்வி விளம்பர நிறுவனம் தற்போது அதற்கு புத்துயிர் பாய்ச்சி இருக்கிறது. ஆம், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் டெய்ரி மில்க் விளம்பரம் அதே பாடலுடன், அதே கிரிக்கெட் மைதானக் காட்சியுடன் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை என்ன புதுசு, என்ன சிறப்பு என்றால் ஜெண்டர் ஸ்வாப். ஆம் இந்த முறை களத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனை விளையாட ஆண் ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்த ஆட்டம் போடுகிறார். இந்த விளம்பரம் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


கிரிக்கெட் எவ்வளவு கொண்டாடப்பட்டாலும் கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. அந்த பாலின பேதத்தை உடைக்கும் வகையில் பெண்கள் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.


பிராண்டிங் ஸ்பெஷலிஸ்டான கார்த்திக் தனது ட்விட்டரில், வாவ் கேட்பரி டெய்ரி மில்குக்கும் ஆகில்வி நிறுவனத்துக்கும் தலை வணங்குகிறேன். ஒரு சின்ன ட்விஸ்ட். அதுவும் எல்லோருமே யூகிக்கும் ட்விஸ்ட்தான். ஆனால் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட ட்விஸ்ட்டைக் கொடுத்து ரசிக்க வைத்துவிட்டீர்கள் என்று நெகிழ்ச்சி பொங்க ட்வீட் செய்துள்ளார்.