90-களில் தொடங்கி இன்று வரை காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் டாக்டர்.ஏ.வி.தாமோதரன் என்கிற தாமு . தனது நகைச்சுவை நடிப்பு மற்றும் மிமிக்கிரி ஆகியவற்றால் தனக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர் நடிகர் தாமு. நடிகர் சார்லி மற்றும் ராமுவின் நகைச்சுவை காம்போ 80-களில் பிரபலம் , கே.பாலச்சந்தரின் மாணவன் என்ற பெருமை இவருக்கு உண்டு. சினிமா மட்டும் அல்லாமல் இவர் படிப்பிற்காக பல நல்ல காரியங்களை செய்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படும் தாமு மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா கற்றவர். டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் மாணவர், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மிகவும் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார். அவர் ஒரு பேட்டியில் நடிகர் விவேக் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துகொள்கிறார். அவர் பேசுகையில், "நாங்கள் இருவரும், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே நண்பர்கள். தொலைகாட்சியில் ஆடிஷன் செல்வதில் இருந்தே இருவருக்கும் பழக்கம். அப்போது நானும் ஒரு ப்ரோக்ராம் பண்ணேன், அவரும் பண்ணார். அவருக்கும் ஒரு எபிசோட் ஹிட் ஆனது, எனக்கும் ஆனது. பின்னர் சினிமாவில் அவர் கே.பி. சார் படத்தில் வந்துவிட்டார். தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்தார், நானும் சினிமாவுல வந்துட்டேன்.
அப்புறம், லவ் டுடே படம் ஒரு பெரிய பிரேக் கொடுத்த படம். ரெண்டு பேரின் சேர்ந்து நடிச்சோம், நல்ல வரவேற்பு கிடைச்சுது. அப்புறம் அப்படியே சேர்ந்து பல படங்கள் நடிக்க ஆரம்பிச்சோம். அப்புறம் கடைசியா கலாம் குருகுலத்திற்கும் ரெண்டு பேரும் ஒண்ணா வந்தோம். அவரு க்ரீன் பக்கம் போயிட்டாரு, நான் கல்வி பக்கம் வந்துட்டேன். இப்படித்தான் எங்களது வாழ்க்கை ஒன்றாகவே இருந்துச்சு. அவர் என்னுடைய நல்ல ரசிகர். என்னுடைய சிறந்த ரசிகர்ன்னு நான் எப்போவும் சொல்லுவேன். என்னை எப்போதுமே தூக்கிவிட்டு கொண்டே இருப்பார். ஷூட்டிங்கில் நிற்கும் ஆடு, மாடு கோழிகளை எல்லாம், மிமிக்ரி செய்து அருகில் வர வைப்பது ஒரு விளையாட்டு எங்களுக்கு, அதனை துவங்கி வைப்பது விவேக்தான். நான் செய்யும் மிமிக்கிரியை அப்படி ரசிப்பார்.
அதே நேரம் விவேக் நல்லாவே கோபப்படுவார். அவர் கோபப்பட்டால் ட்ரீட் கண்டிப்பாக இருக்கும். அப்படித்தான் என்னால் ஒரு முறை ஷாட்டிங் தாமதமாகிறது. அவர் ட்ரெயின் ஏறி பொள்ளாச்சி போக வேண்டிய அவசரத்தில் இருக்கிறார். ஆனால எனக்கு ஹீரோ ஆனந்த் செய்யும் ரியக்ஷனை பார்த்தால் சிரிப்பு வந்துவிடுகிறது, அவர் யார் சிரித்தாலும் சிரித்துவிடுவார். ரொம்ப நேரம் எடுத்து பார்த்தோம் என்னால் கன்ட்ரோல் செய்யவே முடியவில்லை. ஆனால் இயக்குனர் சீட் பண்ணி மேட்ச் செய்துகொள்ளலாம் என்று கூறிவிட்டார். ஆனால் விவேக் என்னை பயங்கரமாக திட்டிவிட்டார். இவ்வளவு காசு போட்டு எடுக்குறாங்க விளையாட்டு தனமா இருக்க என்று திட்டிவிட்டார். திட்டிவிட்டு சொல்லாமலே கூட போய்விட்டார், பிறகு லேண்ட்லைனில் தொடர்பு கொள்கிறார். 'என்ன கோவமா இருக்கியாமே' என்றார். ஆமாம் எல்லார் முன்னாடியும் திட்டிட்டு போய்ட்ட என்றேன். சரி சரி வா வெளில போகலாம் என்றார். விவேக் திட்டினாள் பிறகு கூப்பிட்டு ட்ரீட் வைப்பார்.
விவேக்கை பற்றி அதிகம் வெளியில் தெரியாத விஷயங்களில் ஒன்று, விவேக்கிற்குள் இருந்த இசை அறிவு. இசையை தியரிட்டிக்கலாகவும் பேசுவார், கீபோர்டு வாசிப்பார். அவர் ஒரு கீபோர்டு மாஸ்டர், எப்படி அவருக்கு அந்த திறன் வாய்த்தது, எங்கே கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் அவருக்குள் ஒரு இசையமைப்பாளர் இருந்தார், அதனை அவர் வெளியில் கொண்டு வரவே இல்லை. ஒருவேளை காமெடியில் செலவிடுவதற்கே நேரம் சரியாக இருந்ததோ என்று தெரியவில்லை. இன்னொன்று அவருக்குள் இருந்த இயக்குனர். பல இயக்குனரிடம் வேலை செய்த ஒருவனுக்குள் இயக்குனர் உருவாகிறார், பல நடிகர்களை இயக்கிய இயக்குனருக்குள் ஒரு நடிகர் இருக்கிறாரா என்பது எழுதப்படாத விதி. அவருக்குள் ஒரு பயங்கரமான இயக்குனர் இருந்தார். அதனை அவர் பயன்படுத்தி இருந்தால், நாங்கள் எல்லோருமே வேறு ஒரு பரிமாணத்தில் இருந்திருப்போம். என்னை வேறு ஒரு தாமுவாக காட்டியிருப்பார். அப்படி பட்ட திறமையான இயக்குனர் அவருக்குள் இருந்தார்." என்று கூறினார்.