அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கிய இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பையும், சக்தி பாலாஜி இசையையும் கவனித்துள்ளனர்.
பல்வேறு படங்கள் வெளியான சூழலில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன், இயக்குநர் பாலாஜி, நடிகர்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தனஞ்ஜெயன், பல படங்கள் வெளியான போட்டிக்கு மத்தியில் இந்தப் படம் பெற்ற வரவேற்பு சிறு முதலீட்டுப் படங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார். படப்பிடிப்பு 60 முதல் 70 சதவீதம் முடிந்த நிலையில் நடிகர் ஒருவருடன் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டதால் படக்குழு முக்கிய முடிவு எடுத்ததாகவும், பின்னர் சித்து முழு ஈடுபாட்டுடன் இணைந்து நடித்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார். நடிகர்கள் ஒப்பந்தப்படி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், வாரந்தோறும் அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளியாவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இயக்குநர் பாலாஜி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட பெரும்பகுதி காட்சிகளை கைவிட்டு மீண்டும் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். தயாரிப்பாளர்கள், குடும்பத்தினர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், இது வழக்கமான வெற்றி விழா அல்ல; ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு என்றார்.
நடிகை தர்ஷிகா, இதை தனது முதல் படமாக பெருமையுடன் குறிப்பிடுவேன் என்றார். ரித்விகா, படத்தை திரையரங்குகளில் மக்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும், ஓடிடிக்காக காத்திருக்காமல் திரையரங்கு அனுபவத்தை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நடிகர் சித்து, சினிமா வாய்ப்புக்காக 14 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், தற்போது ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை வரவேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். சினிமாவை நம்பினால் அது கைவிடாது என்றும் அவர் கூறினார்.
படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள் வழங்கிய விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்த பதிவுகளும் முக்கிய காரணமாக இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். பத்திரிகையாளர் காட்சியில் கிடைத்த வரவேற்பு திரையரங்குகளிலும் தொடர்ந்ததாக பாலாஜி குறிப்பிட்டார். மேலும், ஒளிப்பதிவாளர் மணிகண்டன், எடிட்டர் ராஜா ஆறுமுகம், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோரின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். இந்தப் படத்தின் மூலம் தங்களுக்கு கிடைத்த அனுபவம் அடுத்தடுத்த படைப்புகளுக்கு உற்சாகமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். சிறிய படங்களுக்கும் திரையரங்குகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. படத்தில் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடர்ந்து கிடைக்கும் பார்வையாளர்களின் ஆதரவு படத்தின் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் எனவும் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
