2022 ஆம் ஆண்டு த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. தற்போது அவர் இயக்கியுள்ள 'த பெங்கால் ஃபைல்ஸ்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 முதல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது படத்தின் இயக்குநர் கண்ணீர் விட்டு அழுதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ப்ரோமோஷனுக்கு கூட காசு இல்லை
மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார், சிம்ரத் கவுர் ஆகியோர் நடித்து விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள படம் 'த பெங்கால் ஃபைல்ஸ்'. அபிஷேக் அகர்வால், பல்லவி ஜோஷி மற்றும் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். 1946 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. முன்னதாக த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் இப்படத்திலும் இஸ்லாமியர்களை இந்துக்களை கொடூரமாக கொலை செய்தவர்களாக மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை.
இப்படத்தின் ப்ரோமோஷனின் போது படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய கூட பணமில்லை என்றும் விமான பயணத்திற்கான டிக்கெட்டிற்கு கூட பணம் கடன் வாங்கியதாக இயக்குநர் வீடியோ வெளியிட்டார். இதை கூறியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
படத்தை புறக்கணித்த ரசிகர்கள்
காஷ்மீர் ஃபைல்ஸ் , கேரளா ஸ்டோரி என ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் இஸ்லாமியர்களின் மீதா வெறுப்பை பரப்பும் விதமான பல பிரச்சார படங்கள் வெளியாகின்றன. இந்த படங்கள் இந்துத்துவ அமைப்புகளால் கொண்டாடவும் படுகின்றன. ஆனால் த பெங்கால் ஃபைல்ஸ் படத்தை பெரும்பாலான இந்தியர்கள் நிராகரித்துள்ளார்கள். படத்திற்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் போதிய அளவிலான திரையரங்குகள் கிடைக்கவில்லை என படக்குழு பல விதங்களில் படத்திற்கு கவனமீர்க்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார்கள். ஏற்கனவே பாஜக ஆட்சியில் வேலையில்லாமல் , சமூக ஒழுக்க சீர்கேடுகளை தினமும் சந்தித்து வரும் மக்கள் வெற்று மதப் பெருமிதத்தை பேச விரும்பவில்லை என்றும் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய வெறுப்பை திணித்து காசு பார்க்க அவர்கள் விரும்பவில்லை என்றும் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.