இயக்குனர் சேரன் இயக்கத்தில் நவம்பர் 1ம் தேதி வெளியான "தவமாய் தவமிருந்து" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. தாய் பாசம் தான் உலகில் சிறந்தது என முதன்மைப்படுத்தும் சினிமாவில் ஒரு தந்தையின் அன்பையும் பாசத்தையும் ஒரு குழந்தையை ஆளாக்குவதில் அவர் படும் சிரமங்களை பற்றியும் மிகவும் அழகா சித்தரித்த திரைப்படம். 


 


தந்தையின் பாசம் பற்றி தெரியுமா ?


இன்றைக்கு இருக்கும் நெருக்கடியான வாழ்க்கை சூழலில் நாம்  ஒவ்வொருவரும் நமது உறவுகளை பற்றி எண்ணக் கூட நேரமில்லாமல் தனி தனி தீவுகளாக வாழ்க்கை சக்கரத்தை ஓட்டி வருகிறோம். அப்படி பட்ட ஒரு சூழலில் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒரு தந்தையின் வாழ்க்கையை நம் கண்ணு முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் இயக்குனர் சேரன். உறவுகளின் அவசியத்தையும், இன்றைய சூழலின் அபாயத்தையும் உணர்ச்சிகள் ததும்ப ஒரு காவியம் படைத்த திரைப்படம் "தவமாய் தவமிருந்து".


 



 


மிடில் கிளாஸ் வாழ்க்கை :


ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தை கதாபாத்திரமாக நடிகைகள் வாழ்ந்திருந்தார் நடிகர் ராஜ்கிரண். ஒரு தந்தை பற்றிய திரைப்படம் என்றாலும் அவரின் துணையாக எந்த சூழலிலும் துணை நின்று அசத்தியிருந்தார் நடிகை சரண்யா. சேரனின் மனைவியாக நடித்த நடிகை பத்மப்ரியாவும் அவரின் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருந்தார். குறிப்பாக ஒரு மிடில் கிளாஸ் பெண் தனது கர்ப்ப காலத்திலும் பொருளாதார நெருக்கடிக்காக கஷ்டப்படும் நேரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சேரனின் அண்ணன் கதாபாத்திரமாக நடித்த ஆர்.ஜெ. செந்தில் மற்றும் அண்ணி கதாபாத்திரம் என அனைவரும் அந்த படத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். 


 






 


இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சி பொங்கி வழிந்தோடும். அதில் பயணிக்கையில் நமக்கு அது அப்படியே தொற்றிக்கொள்ளும். இது தான் அப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். இப்படத்தில் இடம்பெற்ற "ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா..." என்ற பாடல் நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடும். ஒரு வழக்கமான தமிழ்  சினிமாவில் இருக்க வேண்டிய காமெடி, டான்ஸ், அதிரடி காட்சிகள், குத்து பாட்டு, ட்விஸ்ட் என எதுவுமின்றி படம் முழுக்க ரசிகர்களை உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் தக்கவைத்து "தவமாய் தவமிருந்து" திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரம். எத்தனை ஆண்டுகளை கடந்தாலும் தவமாய் தவமிருந்தாலும் இந்த படைப்புக்கு ஈடு இணை கிடையாது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டிய இப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது