சினிமா, தொலைக்காட்சி பிரபலங்கள், மாடல்கள், சமூக வலைதள பிரபலங்களை வைத்து விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்து உள்ளது. வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை போன்ற பிக் பாஸ் போட்டியை நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நடத்தி வருகிறார். தற்போது 5 வது சீசனும் தொடங்க இருக்கிறது.


இந்த நிலையில், விஜய் டிவிக்கு போட்டியாக ஆக்சன் கிங் அர்ஜுனை வைத்து சர்வைவர் என்ற போட்டியை நடிகர்கள், பிரபலங்களை வைத்து நடத்தி வருகிறது ஜி தமிழ் தொலைக்காட்சி. இதில் நடிகர்கள் விக்ராந்த், நந்தா, லட்சுமி, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் விளையாடி வருகின்றனர்.


15 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சர்வைவர் நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, வி.ஜே. பார்வதி ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர். இந்த நிலையில் 15 வது நாள் போட்டியில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.



இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர், “தோல்வி என்பதே வாழ்க்கையின் படிகள். அதில் ஏறி பயணித்தால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும். தோத்தாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்குடா பாப்பா. நீ தோல்வியாளர் இல்லை. நீ சர்வைவர் டா கறுப்பு அழகி” என நம்பிக்கையூட்டும் வரிகளை எழுதி இருக்கிறார்.


இந்த நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இந்திரஜா சங்கரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக சர்வைவர் நிகழ்ச்சி குறித்து வாய் திறந்து இருக்கிறார். “இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் என் மீதான உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மக்களே…நீங்கள் இல்லாமல் என்னால் இதை நிச்சயம் செய்து இருக்க முடியாது. ஜீ தமிழ் தொலைக்காட்சி பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வைவர் குழுவினருக்கும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தவர்களுக்கும் நன்றி.


என்னை மிகச்சரியாக வழிநடத்தி கொண்டு சென்ற அர்ஜுன் சாருக்கு நன்றி. அதே எனது சக போட்டியாளர்களுக்கு அடி மனதில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை அக்கரையுடன் கவனித்துக் கொண்டீர்கள். நல்லதையும் கெட்டதையும் நிறைய கற்றுக்கொடுத்தீர்கள். இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக எப்போதும் இருக்கும் எனது குடும்பத்தினருக்கும் நன்றி. நான் சர்வைவர் நிகழ்ச்சியில் பயணித்த ஒவ்வொரு வினாடியிலும் உங்கள் அனைவரையும் நேசித்தேன்.” என விரிவாக பதிவிட்டு இருக்கிறார்.