தங்கலான்


பா.ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகசஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்


என்னுடைய டிரைவர் கூட எனக்கு மேக் அப் போட்டார்


படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வரிசையாக நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம் இப்படி பேசினார் “ நான் பொதுவாக இதை சொன்னது கிடையாது. ஆனால் இன்று என்னுடைய டீமுக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் எனக்காக அவர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். எனக்கு தினமும் மேக் அப் போடுவதற்கே 3 மணி நேரம் ஆகும். மேக் ஆள் இல்லாமல் என்னுடைய டீம்மில் இருந்தவர்கள் தான் ஒருபக்கம் எனக்கு மேக் அப் டேட்டூ எல்லாம் போடுவார்கள். இன்னொரு பக்கம் நான் போட்டிருந்த டேட்டூவை ஒருத்தர் மறைத்துக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆள் இல்லாமல் என்னுடைய டிரைவர் வந்து என் காலுக்கு மேக் அப் போட்டுக் கொண்டு இருப்பார். இந்தப் படத்தில் நீங்கள் அனைவரும் நிறைய உழைத்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.


எனக்குள் தங்கலான் இருக்கிறான்


தங்கலான் படத்தில் நான் ஏன் நடிக்கிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். அப்போது எனக்கு சரியாக பதில் சொல்ல தெரியவில்லை. நான் யோசித்து பார்த்தபோது எனக்குள் தங்கலான் இருக்கிறான். அவனுக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். தங்கலான் என்பவன் ஒரு தலைவன். தன்னுடைய மக்களுக்கான விடுதலைக்காக அவனுக்கு ஒன்று தேவைப்படுகிறது. அவனைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அது அவனுக்கு கிடைக்காது என்கிறார்கள். தன்னால் யோசித்துகூட பார்க்க முடியாத ஒன்றுக்காக அவன் ஆசைப்படுகிறான். அவன் அடிபட்டு இன்னல்பட்டு திரும்பி வந்து என்னால் முடியும் என்று சொல்வான்


எனக்கு இதை என்னுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. நான் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது இருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. நான் கல்லூரி படிக்கும்போது தான் நடிப்பில் மீது எனக்கு பைத்தியம். கல்லூரியில் ஒரு நாடகத்தில் நடித்து எனக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் தங்கலான் மாதிரியே அன்று நான் என் காலை உடைத்துக் கொண்டேன். 23 சர்ஜெரி 3 வருடம் படுக்கையில் தான் கிடந்தேன். மருத்துவர்கள் என் அம்மாவிட நான் இனிமேல் நடக்கவே மாட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் நடிக்க வேண்டும் என்று கிறுக்கன் மாதிரி இருந்தேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள். உன்னால் நடக்கவே முடியாது நீ எப்படி நடிக்கப் போகிறாய் என்று கேட்பார்கள். பின் அதே காலை வைத்து வேலைக்கும் போவேன். மாதம் 750 ரூபாய் சம்பளம். பின் சினிமாவிற்கு வந்தேன். 10 வருடம் போராடினேன். ஆனால் படம் ஓடவில்லை. 10 வருடமாச்சு படம் ஓடவில்லை.  உனக்கு இது வரவில்லை விட்டுவிட்டு வேற வேலைய பாரு என்று மறுபடியும் ஆரம்பித்தார்கள். என் நண்பர்கள் எல்லாம் வாழ்க்கையில் முன்னேற தொடங்கிவிட்டார்கள். அன்று நான் விட்டிருந்தால் இன்று நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். ஒருவேளை எனக்கு ஒரு பெரிய வெற்றிப்படம் இன்று வரை கிடைக்காமல் இருந்தால் இன்றும் நான் அந்த வெற்றிக்கு முயற்சிதான் செய்திருப்பேன்.” என்று விக்ரம் பேசினார்.