தங்கலான் பட ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும், இது ஒரு அற்புதமான பயணம் என்றும் நடிகர் விக்ரம் பதிவிட்டுள்ளார்.
தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் மற்றும் கடைசி நாள், நடிகை பார்வதி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் இருவருடனும் தான் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களைப் பகிர்ந்து விக்ரம் பதிவிட்டுள்ளார்.
கனவை நனவாக்கிய ரஞ்சித்
“இத்துடன் நிறைவடைந்தது. என்ன ஒரு பயணம்! மிகவும் அற்புதமான சிலருடன் இப்படத்தில் பணிபுரிந்துள்ளேன். மேலும் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.
இங்கே பகிர்ந்துள்ள முதல் ஃபோட்டோவுக்கும் கடைசி ஃபோட்டோவுக்கும் இடையே வெறும் 118 வேலை நாட்கள் தான் இருந்தன. இந்தக் கனவை உண்மையாக்கியதற்கு ரஞ்சித்துக்கு ஒவ்வொரு நாளும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
விக்ரமின் இந்தப் பதிவு ட்விட்டரில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
முதன்முறை கூட்டணி
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் உடன் நடிகர் விக்ரம் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் தங்கலான்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. பசுபதி பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்த நிலையில், இந்த வித்தியாசமான காம்போவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வந்தது.
நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் இருவருமே அவ்வப்போது தங்கலான் ஷூட்டிங் அனுபவங்கள் மற்றும் படத்துக்காக தாங்கள் தயாரான விதம் ஆகியவை குறித்து தங்கள் இணைய பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட்கள் வழங்கி வந்தனர்.
கோலார் தங்க வயல் பற்றிய கதை
கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை, அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் எழுச்சி ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக படப்பிடிப்பின்போது விக்ரமுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சிறிது நாள்கள் ஓய்வெடுத்து மீண்டும் ஷூட்டிங்குக்குத் திரும்பினார். இந்நிலையில், தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் முயற்சியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.