வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். 17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நூறு படங்களை நெருங்கியிருக்கிறார் ஜி.வி. பல்வேறு இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை சம்பாதித்திருக்கும் ஜி.வி.பிரகாஷின் அடுத்து வெளியாக இருக்கும் படங்களைப் பார்க்கலாம்
கேப்டன் மில்லர்
ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லரில் ஜி.வி தனது வழக்கமான ஸ்டைலில் கொடுத்திருக்கும் விசில் பிஜிஎம் ரசிகர்களை விசிலடித்தபடி உலாவச் செய்திருக்கிறது. கூடிய விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். வரும் டிசம்பர் 15 தேதி வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது கேப்டன் மில்லர் திரைப்படம்
மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி விஷால் , எஸ்,ஜே சூர்யா, செல்வராகவன், உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் படம் மார்க் ஆண்டனி. சைன்ஸ் ஃபிக்ஷனாக உருவாகி வரும் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தங்கலான்
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் , பார்வதி, மாளவிகா மொகனன் நடித்துள்ள படம் தங்கலான். கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தங்கலான். அடுத்த ஆண்டு பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் தங்கலான் திரைப்படம் ஜி.வி.பிரகாஷின் கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜப்பான்
குக்கூ, ஜோக்கர் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ஜப்பான். அண்மையில் இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
எஸ்.கே 21
ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்து வரும் சிவகார்த்திகேயனின் 21-வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ் 100
சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காராவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் சூர்யா. கங்குவா படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்தவுடன் இந்தப் படத்தின் வேலைகள் தொடங்க இருக்கின்றன. இது இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷின் 100-வது படமாக இருக்கும்.
மேலும்
மேலும் மிஷன் , டியர், கள்வன் , சைரன், லக்கி பாட்சா, எமர்ஜென்சி, டைகர் , ஆதிகேசவா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.