இயக்குநர் ராம் சங்கையா இயக்கி பசுபதி நடித்திருக்கும் படம் தண்டட்டி. தட்டட்டி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. பசுபதி, ரோஜினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து சாம் சி.எஸ் பின்னண் இசை கொடுத்திருக்கிறார். தண்டட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் நாளை ஜூன் 23-ஆம் தேதி  இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தில் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளில் படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குநர் கலந்துகொண்டு வருகிறார்கள்.


பேட்டி ஒன்றில் நடிகர் பசுபதி வாய்ப்புகளுக்காக காத்திருப்பது பற்றி தனது அனுபத்தில் இருந்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


பசுபதியின் வளர்ச்சி


சினிமாவில் தனக்கான இடத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார் பசுபதி. ஆரம்ப காலத்தில் நடித்தப் படங்களில் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்களே வழங்கப்பட்டன . அதனை விரும்பி ஏற்று நடித்த பசுபதி அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஏதோ ஒரு வகையில் தனித்துவமானதாக மாற்றினார். விருமாண்டி திரைப்படத்தில் இவர் நடித்த கொத்தாலத் தேவர் கதாபாத்திரம் இன்றுவரை சிறந்த வில்லன் கதாபாத்திரமாக இருந்து வருகிறது.


வாய்ப்புகளுக்கான காத்திருப்பு


மற்ற நடிகர்களைப்பொல் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லாத பசுபதி சினிமாவிற்கு வந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த  அளவிலான படங்களிலேயே நடித்திருக்கிறார்.


வாய்ப்புகள் மடியில் வந்து  உட்காருவதில்லை


பேட்டி ஒன்றில் காத்திருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த பசுபதி “ வாழ்க்கைல காத்திருக்கவில்லை என்றால் எதுவுமே கிடைக்காது. எல்லாம் மடியில் வந்து உட்காருமா என்ன? அதற்கு போராட வேண்டும். காத்திருப்பு என்பது வாசலில் சும்மா உட்கார்ந்துகொண்டிருப்பது இல்லை. வாய்ப்புகளை உங்களை நோக்கி வரவழைப்பதற்கான நேரம்தான் காத்திருப்பு. சரியான வாய்ப்பு உங்களைத் தேடி வரும்போது நீங்கள் அதைப் பிடித்துக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ ஒரு நடிகராக  நீங்கள் தயாராக இருக்க வேண்டும் . அப்படி  இல்லையென்றால் கிடைத்த வாய்ப்பை கைவிட்டு விடுவீர்கள். அது உங்களை கடந்து போய்விடும்” என்று பதிலளித்துள்ளார் பசுபதி.


பசுபதி நடித்த சிறப்பான கதாபாத்திரங்கள்


விருமாண்டி, வெயில், சார்பட்டா பரம்பரை, மஜா, அசுரன், அரவான், ஆகிய திரைப்படங்களில் தான் நடித்த கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்  நடிகர் பசுபதி .