நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் ஜோசப் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகர் என்பது தான் இன்றைய இணைய வைரல். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மாமனிதன்,குருதி ஆட்டம் ,நானே வருவேன்,எரியும் கண்ணாடி, எஜெண்ட் கண்ணாயிரம், விருமன்,ஆண்டவர்,இறைவன் மிகப் பெரியவன் என பல படங்களுக்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா இந்த 25 வருட சினிமா வாழ்க்கை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மகன் சஞ்சய் குறித்த ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது வைரலாகி வருகிறது. நடிகர் விஜயை யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் சந்தித்தது வைரல் ஆகி இருந்தது. அந்த சந்திப்பு எதிர்கால திரைப்படமாக மாறும் என்பது ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த செய்தியை யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டு விஜய் ரசிகர்களையும், யுவன் ரசிகர்களையும் குளிர்வித்துள்ளார். அதாவது நடிகர் விஜய்யின் நண்பர் ஜெகதீஷ் என்பவர் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு சஞ்சய்யின் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தில் சஞ்சய் 'யுவனிசம்' என எழுதப்பட்டிருக்கும் டி ஷர்ட்டை அணிந்து கொண்டுள்ளார்.



மேலும் அதை பற்றி அவர் பேசுகையில்,"ஒரு விஷயத்தை இங்கே பகிர்ந்துக்க விரும்புறேன். விஜய் சாருடன் இருக்கும் ஜெகதீஷ் எனக்கொரு ஃபோட்டோ அனுப்பினாரு. விஜய் சாரோட மகன் யுவனிசம்ங்கற டி-ஷர்ட் போட்டுருந்த ஃபோட்டோ அது. இதை பாத்து எப்படி ரியாக்ட் பண்ணனும்ன்னே எனக்கு தெரியல. அப்புறம் ஃபெண்டாஸ்டிக் ப்ரோன்னு மெசேஜ் அனுப்பினேன். கொஞ்ச நாள் கழிச்சு விஜய் சாரை மீட் பண்ணும்போது, நான் தான் அந்த ஃபோட்டோவை உங்களுக்கு அனுப்ப சொன்னேன். என் பையன் உங்களோட பயங்கரமான வெறியன். இது யுவனுக்கு தெரியனும்ன்னு தான் இதை அனுப்ப சொன்னேன்னு சொன்னார். இதை நான் வெளில போஸ்ட் பண்ணல. ஏன்னா இது பெர்சனலான விஷயம்ன்னு நினைச்சேன்" என்று பேசிய அவர் குறிப்பாக அந்த புகைப்படத்தை நடிகர் விஜய் தான் யுவன் சங்கர் ராஜாவுக்கு அனுப்பச் சொன்னார் என்பதையும் அந்த மேடையில் பகிர்ந்துள்ளார். அந்த செய்தியை அவர் நேரில் சந்தித்தபோதுதான் விஜயே நேரில் கூறியுள்ளாராம். அந்த மெசேஜ் இவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம் என்பதால் பொதுவெளியில் பகிரவில்லை, இப்போதுதான் வெளியில் சொல்கிறேன் என்று கூறினார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் யுவன் சங்கர் ராஜாவின் வெறித்தனமான ரசிகர் என பலரும் அறிந்திராத இந்த செய்தி இப்பொழுது இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.



தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இதுவரை விஜய்யுடன் ஒரேயொரு படத்தில்தான் பணியாற்றி இருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான், அனிருத் என பலருடன் ரிப்பீட் மோடில் விஜய் பணியாற்றினாலும் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் கூட்டணியை யுவன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். விஜய் போலவே முன்னணி நடிகரான அஜித்தின் ‘தீனா’, ‘பில்லா’, ‘பில்லா 2’, ‘ஏகன்’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ என தொடர்ந்து பணியாற்றி வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. ஆனால், விஜய் படத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படத்தைத் தவிர இதுவரை யுவன் பணியாற்றவில்லை. கடந்த 17 ஆண்டுகளாக இக்கூட்டணி மீண்டும் இணையாததால் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருகிறார்கள் விஜய்-யுவன் ரசிகர்கள்.