ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில்,அப்படத்திற்கு பிரச்னை வரும் என முன்கூட்டியே விஜய் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
ஜனநாயகனுக்கு வந்த சோதனை
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. அவரின் 69வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படியான நிலையில் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பிரச்னையில் சிக்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாளை (ஜனவரி 9) காலை தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். தீர்ப்பு வழங்கினாலும் ஜனநாயகன் திட்டமிட்டபடி வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் நிலவுவதால் தயாரிப்பு நிறுவனம் பட ரிலீஸை ஒத்தி வைத்திருக்கிறது.
படத்துக்கு முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தை திருப்பி தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திரைத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்கூட்டியே கணித்த விஜய்
இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜனநாயகனுக்கு படத்துக்கு வேண்டுமென்றே பிரச்னை கொடுப்பதாக தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசை ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளனர். இப்படியான நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.
அதில், “இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் நான் படம் உருவாகும் முன் ஒரு கேள்வி கேட்டேன். அதாவது “சார்.. சும்மாவே என் படத்துக்கு பிரச்னை வரும். இப்போது நான் அரசியலுக்கு வந்துருக்கேன். எப்படி இந்த நேரத்துல நீங்க என்னைய வச்சு படம் பண்ணுறீங்களே.. பரவாயில்லையா?” என கேட்டேன். ஆனால், அவர் அதையெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை. உடனே செய்யலாம் என பாசிட்டிவ் எண்ணத்தோடு பேசி அந்த எனர்ஜியை எங்கள் மீதும் பரவ செய்தார்” என விஜய் கூறியிருப்பார்.
இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக விஜய் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது ரசிகர்களிடையே அதிருப்தியை கிளப்பியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு காவலன் படம் தொடங்கி துப்பாக்கி, தலைவா, கத்தி, புலி, சர்கார், மெர்சல், மாஸ்டர், வாரிசு, லியோ போன்ற படங்கள் ரிலீசுக்கு முன்பே பிரச்னையை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.