தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் முத்து படத்துக்கு பின் இணைந்த படம் “படையப்பா”. இப்படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, வாசு விக்ரம், லட்சுமி, சித்தாரா, நாசர், மணிவண்ணன், அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர். 


மறக்க முடியாதா படையப்பா?


படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றளவும் டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு இப்படத்தில் மாஸ்ஸான காட்சிகள் பல உள்ளது. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கேரக்டர் அவரின் அடையாளமாகவே மாறிப்போனது. எத்தனை படங்களில் நடித்தாலும் இன்னும் நீலாம்பரி போல இருக்க வேண்டும் என்று தான் ரம்யா கிருஷ்ணனை பலரும் கேட்கின்றனர். 


கிட்டதட்ட இந்த படம் 5 மணி நேரம் ஓடக்கூடியதாக இருந்துள்ளது. அப்போது 2 இடைவேளை விடலாமா என ரஜினி யோசித்துள்ளார். இதுதொடர்பாக கமலிடம் ஆலோசனை கேட்டபோது அவர் ரஜினியின் எண்ணத்தை தவறானது என படத்தை 3 மணி நேரமாக மாற்ற சொல்லியும் உள்ளார். சிவாஜி கணேசன் இறப்பதற்கு முன் செய்த சிறந்த கேரக்டர் படையப்பா தான். இப்படி எண்ணற்ற நினைவுகளை கொண்டது படையப்பா படம். இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பன்ச் வசனங்களுக்காக சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். 






சான்ஸ் கேட்ட விஜய்:


இப்படியான நிலையில் நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ''படையப்பா '' படத்தில் விஜய் நடிக்கவாய்ப்பு கேட்டது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதாவது, “படையப்பா படத்தில் நடிப்பதற்கு என்னை யாரும் கூப்பிடவில்லை. நானே தான் கேட்டேன். ரஜினி சாருடன் நான் நடிக்க வேண்டும். எனக்கு ஒரு சின்ன சான்ஸ் குடுங்க என நான் கேட்டேன்” என விஜய் அந்த வீடியோவில் தெரிவித்திருப்பார். 


மறுத்த கே.எஸ்.ரவிக்குமார்:


அதாவது ரஜினியின் தீவிர ரசிகர், அவரின் நடிப்பை பார்த்து சினிமாவுக்குள் வந்தவர் தான் விஜய் என்பது அனைவரும் அறிந்த தகவல். இப்படியான நிலையில் 1999 ஆம் ஆண்டு உருவான படையப்பா படத்தில் நடிகர் அப்பாஸ் நடித்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார் விஜய். ஆனால் அவர் அப்போது தமிழக மக்கள் நன்கு அறிந்த முன்னணி நடிகராக மாறிக்கொண்டிருந்தார். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு கே.எஸ்.ரவிகுமாரும், தயாரிப்பாளரான ரஜினிகாந்தும் விஜய்க்கு அந்த வாய்ப்பை வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த ‘மின்சார கண்ணா’ படம் அதே ஆண்டு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.