விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நூலகம் தொடங்கப்பட உள்ளது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக விரைவில் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


கடந்த ஜூன் மாதம் விஜய்  பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தை நோக்கிய இந்நகர்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி, ஐடி அணி, மகளிர் அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. மேலும், கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி பயிலகங்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டன.
 
இந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் நூலகங்கள் தொடங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் முதல்கட்டமாக நாளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாம்பரத்தில் நூலகத்தை திறந்து வைக்கிறார். தளபதி விஜய் நூலகம் எனும் பெயரில் தொடங்கப்படும் இத்திட்டம், நாளை காலை தொடங்கி வைக்கப்பட உள்ளது.


அதேபோல் இரண்டாம் கட்டமாக இந்த மாதம் 23ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், தென்காசியில் 2 இடங்களிலும், சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 21 இடங்களிலும் நூலகங்கள் திறக்கப்பட உள்ளன.