தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த விஜய்க்கு மீண்டும் கைக்கொடுத்த படங்களில் ஒன்றான “வேலாயுதம்” வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


தோல்வியில் இருந்து மீண்ட விஜய் 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தில்லை. அதற்காக அவர் தோல்வியையே சந்தித்து இல்லை என சொல்ல முடியாது. 2007 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த போக்கிரி படத்துக்குப் பின் அவர் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இதில் சுறா விஜய்யின் 50வது படம் என்ற நிலையில் அதன் தோல்வி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


இப்படியான நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்க “வேலாயுதம்” படம் வெளியானது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்த இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், சரண்யா மோகன், அபிமன்யு சிங் மற்றும் வினீத் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


இளம் பத்திரிக்கையாளரான ஜெனிலியா, சென்னையில் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் மனித கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து பல தகவல்களை தெரிந்து கொள்கிறார். இதனையறிந்த எதிரி கும்பல் அவரை கொல்ல துரத்தும் நிலையில் நடைபெறும் விபத்தில் அந்த கும்பல் கொல்லப்படுகிறது. உடனே வேலாயுதம் என்ற கற்பனை கேரக்டரை உருவாக்கி குற்றங்களை தடுக்க வருவார் என நம்ப வைக்கிறார் ஜெனிலியா. 


இதனிடையே கிராமத்தில் அன்பு தங்கை சரன்யாவுடன் வாழும் விஜய், திருமணம் தொடர்பான விஷயங்களுக்காக சென்னை வருகிறார். அவருக்கே தெரியாமல் பல ஆபத்தில் இருந்து மக்களை காக்கிறார். இதனால் உண்மையிலேயே வேலாயுதம் என்ற ஒருவர் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். ஒரு கட்டத்தின் தான் தான் அந்த வேலாயுதம் என்ற உண்மை விஜய்க்கு தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர்  அதர்மத்தை எதிர்த்து மக்களை எப்படி காக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.


கூடுதல் தகவல்கள் 


இப்படம் 2000 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆசாத் படத்தின் தாக்கத்தால் உருவானது. ஆனால் அடிப்படை கதையை மட்டும் எடுத்துக் கொண்டு சொந்தமாக திரைக்கதை எழுதியிருந்தார் மோஜன் ராஜா. அதேசமயம் முதல்முறையாக தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்காமல் வெளி நடிகர்களுடன் கைக்கோர்த்தார். மேலும் வேலாயும் படத்தில் இடம் பெற்ற ரயில் சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கும். ஓடும் ரயிலில் படமாக்கப்பட்ட அந்த காட்சியை டூப் எதுவும் போடாமல் அசால்ட்டாக செய்திருந்தார் விஜய். 


முதலில் இப்படத்தில் இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் அணுகப்பட்டார். ஆனால் பின்னர் விஜய் ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அனைத்து பாடல்களுக்கும் துள்ளலான இசை மூலம் அமர்க்களப்படுத்தியிருந்தார். படத்தின் முதல் பாடி காமெடி, இரண்டாம் பாதி ஆக்‌ஷன் என கதையும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியாக பார்த்தால் தோல்வி படம் தான். ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்று தொடர் தோல்வியால் துவண்டு கிடந்த விஜய்க்கு ஆபத்து நேரத்தில் உதவும் சூப்பர் ஹீரோ போல கைக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.